ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நீதி கோரி இலங்கை முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

மியான்மர் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நீதி கோரியும், ரொஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை வலியறுத்தியும் இலங்கை முஸ்லிம்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பள்ளிவாசல்களில் வழக்கமாக நடக்கும் வெள்ளிக்கிழமை நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்னர் இந்த ஆர்பாட்டங்கள் நிகழ்ந்தன.

யாழ்ப்பாணம், வாழைச்சேனை , மீராவோடை மற்றும் மூதூர் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைபெற்ற ஆர்பாட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

ரொஹிஞ்சா முஸ்லிம்களை அந்நாட்டு அரசு திட்டமிட்டு இனச் சுத்திகரிப்பு செய்வதாக குற்றம் சுமத்திய ஆர்பாட்டகாரர்கள் மியான்மர் அரசுக்கு எதிராகவும் அந்நாட்டு அரசின் தலைவர் ஆங் சான் சூ சிக்கு எதிராகவும் வாசக அட்டைகளை ஏந்தியவாறு கண்டண கோஷங்களையும் எழுப்பினார்கள்.

மியான்மரில் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுவதாகவும் அவர்களின் தொடர்ந்தும் அழிக்கப்படுவதாகவும் இந்த ஆர்பாட்டங்களில் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்த நிகழ்வுகளை பார்த்துக் கொண்டு ஐ. நா மௌனம் சாதிப்பது தங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக ஆர்பாட்ட ஏற்பாட்டாளர்களிடமிருந்து கவலையும் விசனமும் வெளியிடப்பட்டது.

ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நீதி கோரி இலங்கை முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

ஆர்பாட்டங்களின் முடிவில் ஆங் சான் சூ சியின் உருவ பொம்மையும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

பள்ளிவாயல்களுக்கு முன்பாக ஓன்று கூடிய ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து குறிப்பிட்ட இடங்கள் வரை பேரணியாக சென்றடைந்து ரொஹிஞ்சா முஸ்லிம்கள் விடயத்தில் ஆங் சான் சூ சியிடம் பேச வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை ஜனாதிபதியிடம் மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்கும் மனுக்களும் உரிய அதிகாரிகளிடம் ஏற்பாட்டாளர்களினால் கையளிக்கப்பட்டன.

இதே வேளை இலங்கை முஸ்லிம்களின் மத ரீதியான உயர் பீடம் என கருதப்படும் அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மீது அந்நாட்டில் தொடரும் வன்முறைகளை நிறுத்தி முஸ்லிம்களை பாதுகாக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் மனித உரிமை ஆணையர் உள்ளிட்ட உரிய தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக உரிய தரப்பினருக்கு அவசர கடிதங்களும் தனித் தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ரொஹிஞ்சா முஸ்லிம்ககளுக்கு எதிராக தொடரும் செயல்பாடுகளை மனிதாபிமானமற்றது, அநீதியானது , கொடூரமானது என சுட்டிக் காட்டி இதனை வன்மையாக கண்டிப்பதாக இலங்கையிலுள்ள மியான்மார் தூதுவரலாயத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த இனச் சுத்திகரிப்பு நிறுத்தப்பட்டு ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நிரந்தர பாதுகாப்பும் தீர்வும் வழங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அந்த கடிதத்தில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

ரொஹிஞ்சா முஸ்லிம்களை பாதுகாத்து அவர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது .

இதே கோரிக்கை இஸ்லாமிய ஓத்துழைப்பு அமைப்பு (IOM) செயலாளர் நாயகத்திடமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் அனைத்து ராஜதந்திர வலையமைப்புகள் வழியாக மியான்மர் அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில் கேட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *