வடகொரியா மீது தடைகளை கடுமையாக்க ரஷ்ய அதிபர் புதின் எதிர்ப்பது ஏன்?

“தங்களுடைய அணு ஆயுத திட்டத்தை கைவிடுவதைவிட அவர்கள் புற்களை சாப்பிடுவார்கள்” என்று கூறி வட கொரியா மீது விதிக்கப்படும் எந்தவிதத் தடைகளும் “பயனற்றவை” என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை வட கொரியாவால் நடத்தப்பட்ட சமீபத்திய அணுகுண்டு சோதனையை ஒட்டி மிகவும் கடுமையான தடைகளை மேலதிகமாக விதிப்பதற்கான புதிய ஐ.நா தீர்மானத்தை பரிந்துரைக்கப் போவதாக திங்கள்கிழமை அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

“ராணுவ நடவடிக்கை” என்ற பிரசாரத்தை அதிகப்படுத்துவது, உலகளாவிய பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்றும் புதின் எச்சரித்திருக்கிறார்.

ராஜதந்திர ரீதியில் பிரச்சனையை அணுகுவதே ஒரே தீர்வாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.

வட கொரியாவின் முக்கிய கூட்டாளியான சீனா, பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று வட கொரியாவை கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளையில், ஜெனீவாவிலுள்ள வட கொரியாவின் ஐநா தூதர் ஹான் யே-சொங், தன்னுடைய நாட்டின் சமீபத்திய “தற்காப்பு நடவடிக்கைகள்” “அமெரிக்காகவுக்கு அனுப்பப்பட்டுள்ள பரிசு தொகுப்பு” என்று தெரிவித்திருக்கிறார்.

தடைகளை பற்றி புதின்

சீனாவின் சியாமெனில் நடைபெறும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பேசியபோது, வட கொரியா மீது விதிக்கப்படும் எந்தத் தடையும் பயனற்றவை என்று புதின் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்ய அதிபர் புதின்

வட கொரியா மேற்கொண்டுள்ள அணு குண்டு சோதனையை “ஆத்திரமூட்டும் செயல்” என்று புதின் கண்டித்திருந்தாலும், எந்த விதமான தடையாக இருந்தாலும், அது பயனற்றதாக, செயல்திறனற்றதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

“அவர்கள் பாதுகாப்பாக உணராவிட்டால், தங்களின் அணு ஆயுத திட்டத்தை கைவிடுவதைவிட புற்களை சாப்பிடுவார்கள். எது பாதுகாப்பை நிலைநிறுத்த முடியும்? சர்வதேச சட்டத்தை ஏற்கச் செய்ய வேண்டும். அதற்கு, சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க வேண்டும்” என்று புதின் தெரிவித்திருக்கிறார்.

“மனித நேய அம்சம்” பற்றி கூறிய புதின், கடும் தடைகள் விதிக்கப்பட்டால், பல லட்சக்கணக்கான மக்கள் துன்பப்படுவர் என்றும், தடைகள் அனைத்தும் தீர்ந்துபோய்விட்டன” என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, வட கொரியா சமீபத்தில் நடத்தியுள்ள மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனை மூலம் அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங்-உன் “போரை உருவாக்க கெஞ்சுவதாக” ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதர் நிக்கி ஹாலே தெரிவித்திருக்கிறார்.

வட கொரியாவின் முக்கிய கூட்டாளியாக விளங்கும் சீனா, வட கொரியா பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளது.

இப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய சுவிட்சர்லாந்து முன்வந்திருக்கிறது.

சர்வதேச உடன்படிக்கைகளை மீறியுள்ள வட கொரியாவுக்கு எதிரான நடவடிக்கை உடனடியாக அவசியம் என்று ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்கிறார்.

தடைகள் ஒருபோதும் உதவப் போவதில்லை என்று தெரிவித்திருக்கும் வட கொரியாவின் ஹான் யே-சொங், அவரது தாய் நாடு அதனுடைய அணு ஆயுத சோதனை தொடர்பாக எவ்வித சூழ்நிலையிலும் பேச்சுவார்த்தை நடத்தாது என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *