ரொஹிஞ்சா கிராமத்தில் 700 வீடுகள் எரிப்பு : குற்றச்சாட்டு

மியான்மரில் உள்ள ரொஹிஞ்சா முஸ்லிம் கிராமம் ஒன்றில் 700 வீடுகள் எரிக்கப்பட்டிருப்பது செயற்கைக்கோள் படத்தின் மூலம் தெரிவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்னும் மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் வன்முறைகளால் ஏற்பட்டுள்ள சேதாரம் முதலில் நினைத்ததைவிட மிக மோசமாக இருக்கும் என்ற கவலையை இந்தப் படம் தருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மியான்மர் ராணுவத்துக்கும், முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் நடந்த மோதலை அடுத்து கடந்த வாரம் பல பத்தாயிரம் ரொஹிஞ்சாக்கள் பக்கத்து நாடான பங்களாதேஷுக்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர்.

தங்கள் வீடுகளுக்கு ராணுவத்தினர் வேண்டுமென்றே தீ வைத்ததாக அகதிகளாக இடம் பெயர்ந்த மக்கள் குற்றம்சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டை மியான்மர் அரசு மறுத்தது.

மியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் உள்ள முகாம் ஒன்றில் பக்ரித் தொழுகை செய்யும் ரோஹிஞ்சா அகதிகள்.
.

மியான்மர் வன்முறையில் இருந்து தப்பிவரும் அகதிகளை பங்களாதேஷுக்குள் அனுமதிக்கவேண்டாம் என்ற அந்நாட்டு அரசின் உத்தரவை மீறி, பங்களாதேஷ் போலீசார் அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருநாட்டு எல்லை வழியாக மியான்மரின் சிறுபான்மை முஸ்லிம்கள் தப்பி வருகிறார்கள். அவர்கள் எல்லையில் தடுக்கப்படவில்லை என்கிறார் பங்களாதேஷின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர்.

அகதிகள் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயர்வு

இதுவரை 58 ஆயிரம் அகதிகள் எல்லையைக் கடந்து பங்களாதேஷுக்குள் வந்திருப்பதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. ராணுவத்தினரோடு பௌத்தக் குழுக்களும் இணைந்துகொண்டு தங்கள் கிராமங்களைக் கொளுத்துவதாகவும் அகதிகள் கூறுகின்றனர்.

20 காவல் சாவடிகள் மீது கடந்த மாதம் ரொஹிஞ்சா தீவீரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தங்கள் ராணுவம் எதிர்வினையாற்றுவதாக மியான்மர் அரசு கூறுகிறது.

மேலும் 20,000 ரொஹிஞ்சா மக்கள் எல்லையில் உள்ள நஃப் நதி நெடுகிலும் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் நீரில் மூழ்கி இறக்கும், நோய் மற்றும் விஷப் பாம்புகள் கடிக்கு ஆளாகும் ஆபத்துகள் இருப்பதாக மனித நேய உதவி அமைப்புகள் கூறுகின்றன.

வரைபடம்

கலவரம் நடந்துவரும் ரக்கைன், மியான்மரில் மிக ஏழ்மையான பகுதி. இங்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரொஹிஞ்சா சிறுபான்மை மக்கள் வசிக்கிறார்கள். புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் மியான்மரில் இச்சிறுபான்மையினர் பல பத்தாண்டுகளாக துன்புறுத்தப்படுகிறார்கள். இவர்கள் அந்நாட்டுக் குடிமக்களாகக் கூடக் கருதப்படவில்லை.

மோசமான மோதல்கள் அவ்வப்போது இங்கு வெடிப்பதுண்டு. 2016ம் ஆண்டுக்குப் பிறகு நடந்தவற்றிலேயே மிக மோசமானது தற்போதைய மோதல்கள். இங்கு சமூகப் பதற்றம் இருந்திருக்கலாம். ஆனால், எல்லையோரம் உள்ள காவல் சாவடிகள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 9 போலீஸ்காரர்கள் கொல்லப்படும் வரை தீவிரவாத்ததுக்கான எந்த அறிகுறியும் இருந்ததில்லை. அக்டோபரிலும், ஆகஸ்டிலும் நடத்தப்பட்ட இந்த இரு தாக்குதல்களையும் ஆருக்கன் ரொஹிஞ்சா சால்வேஷன் ஆர்மி (அர்சா) என்ற குழுவே நடத்தியது.

ராணுவம் தவறு ஏதும் நடக்கவில்லை என்று மறுத்தாலும், முறைப்படியான விசாரணை ஒன்றை தற்போது மேற்கொண்டுள்ளது ஐ.நா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *