பிரிட்டிஷ் விமானப் படை: போரிடும் பிரிவில் பெண்களுக்கு பாதை திறக்கிறது

தங்கள் பிரிவில் உள்ள எல்லாப் பணிகளுக்கும் பெண்களிடம் விண்ணப்பம் பெறுகிற, பிரிட்டிஷ் பாதுகாப்புப் படையின் முதல் பிரிவு என்ற பெருமையைப் பெறுகிறது ராயல் ஏர்ஃபோர்ஸ் ரெஜிமெண்ட்.

பாதுகாப்புப் படையில் முன்னணியில் நின்று போரிடும் பிரிவுகளில் பெண்களை நியமிப்பதற்கு இருந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களிடம் உள்ள எல்லாப் பணிகளுக்கும் வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியிருக்கிறது இப் பிரிவு.

விமான தளங்களை பாதுகாப்பது இந்தப் படைப்பிரிவின் முதன்மைப் பணியாகும். இந்தப்பிரிவைச் சேர்ந்த சிலர் ஆஃப்கானிஸ்தானில் தீவிரமாகப் பணியாற்றியபோது உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டன் ராணுவத்தின் ராயல் ஏர்ஃபோர்சில் வேலை செய்கிறவர்களில் பத்து சதவிகிதம் பேர் மட்டுமே பெண்கள். தற்போதைய ஆள் சேர்க்கைக்கு பெருமளவிலான பெண்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது என்று பிபிசி பாதுகாப்புத்துறை செய்தியாளர் கூறுகிறார்.

மொத்த விமானப் படையில் இந்த ரெஜிமெண்ட் மிகச் சிறிய பிரிவு. இதில் சுமார் 2000 பேர் மட்டுமே உள்ளனர்.

அடுத்த ஆண்டு இறுதியில் இருந்து இன்ஃபெண்ட்ரி எனப்படும் காலாட்படையிலும், ராயல் மெரைன்ஸ் எனப்படும் பிரிட்டிஷ் கடற்படையிலும் பெண்கள் படிப்படியாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *