பேனசீர் பூட்டோ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் விடுதலை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேனசீர் பூட்டோ, 2007ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அக்கொலைச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, தாலிபன் குழுவைச் சேர்ந்தவர்களென சந்தேகிக்கப்பட்டஐந்து பேர் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான ஆதரங்கள் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொலையை தடுக்க தவறிய குற்றத்திற்காக இரண்டு போலிஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கொலையில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப், வழக்கு விசாரணையிலிருந்து தப்பி ஓடியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசார பேரணி ஒன்றிற்கு பிறகு, பேனசிர் பூட்டோ துப்பாக்கியால் சுடப்பட்டும், வெடிகுண்டு தாக்குதலிலும் கொல்லப்பட்டார்.

கடந்த வருடத்திலிருந்து, ஜெனரல் முஷ்ரஃப், தானாகவே நாட்டைவிட்டுச் சென்று வேறு நாட்டில் வாழ்ந்து வருகிறார். மேலும் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் நிலையை எதிர்கொள்கிறார்.

இந்த தீர்ப்பு குறித்து அவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை; மேலும் கொலையில் தனக்கு பங்கில்லை என்றும் தெரிவித்தி்ருந்தார்.

பூட்டோவின் கொலைக்கு பாகிஸ்தான் தாலிபன் தலைவர் பைட்டுள்ளா மெஹசூத் தான் காரணம் என முஷரஃபின் அரசு குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் மெஹசூத் அக்குற்றச்சாட்டை மறுத்திருந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் பைட்டுள்ளா மெஹசூத் கொல்லப்பட்டார்.

2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொல்லப்பட்ட பேனசீர் பூட்டோ, பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிகுந்த நபராக இருந்தார். மேலும் இரண்டு முறை நாட்டின் பிரதமராக இருந்துள்ளார்.

பேனசீரின் கொலை தடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் முஷரஃபின் அரசு போதுமான பாதுகாப்பை கொடுக்க தவறிவிட்டது என்றும் 2010ஆம் ஆண்டின் ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது; ஆனால் அச்சமயத்தில் அது ஒரு “பொய்களின் மூட்டை” என முஷரஃபின் கூட்டாளிகள் அதனை புறக்கணித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *