பேருவளை, ஆளுத்கம மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முடிவு

இலங்கையில் முந்தைய மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் ஏற்பட்ட மோதல்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தோருக்கு இழப்பீடும் நிவாரணமும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு ஜுன் 15, 16 ஆகிய தேதிகளில் பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல்களின் போது முன்று முஸ்லிம்கள் மரணமடைந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்தனர். .

இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடும், காயம் அடைந்தோருக்கு நிவாரணமும் வழங்க புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமரப்பித்த இந்த யோசனையை அமைச்சரவையை ஏற்றுக் கொண்டுள்ளது.

அதன்படி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தலா இருபது லட்சம் ரூபாயும், காயமடைந்த நபருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இது குறித்து மனித உரிமை செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான நாமல் ராஜபக்ஷ கூறுகையில், பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.

ஆனால் இழப்பீடு வழங்குவதன் மூலம் மட்டும் பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க முடியாதென்று கூறிய வழக்கறிஞர் ராஜபக்ஷ, இந்தச் சம்பவத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய நபர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனைகளை வழங்குவதன் முலம் மாத்திரமே பாதிக்கப்பட்டோருக்கு முழுமையாக நியாயத்தை வழங்க முடியுமென்று தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்ப்பாக கடும்போக்குவாத சிங்கள அமைப்பான பொது பல சேனா மீது குற்றம்சாட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *