இலங்கையில் முஸ்லிம் மாணவர்களுக்கு உதவிய பௌத்த மதகுரு

இலங்கையில் பௌத்த மதகுரு ஒருவர் தனது சொந்த நிதியில், அரசு முஸ்லிம் பள்ளி ஒன்றுக்கு மூன்று மாடிக் கட்டடத் தொகுதியை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.

இக்கட்டடத்திற்கு நன்கொடை வழங்கிய அத்தனகல ரஜ மகா விகாரையின் பிரதான விகாராதிபதி பன்னில ஆனந்த நாயக்க தேரரைக் கௌரவிக்கும் வகையில், கட்டடத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கம்பகா மாவட்டம் திஹாரியா அல்-அஸ்ஹர் மத்தியக் கல்லூரியின் தேவை கருதி அமைக்கப்பட்ட இக்கட்டடத் தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவில் வகுப்பறைகள் மற்றும் பிரதான மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கி, இந்த மூன்று மாடிக் கட்டடம் அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “தேசிய நல்லிணக்கத்தை தாக்குதல்கள் இன்றி புரிந்துணர்வு மூலம்தான் கட்டியெழுப்ப முடியும்,” என்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பள்ளி கட்டடத் தொகுதியை திறந்து வைத்தார்.

“நாட்டில் அனைத்து இனங்களுக்கிடையிலும் ஐக்கியத்தை வலுப்படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அரசு முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவோர் எதிர் காலத்தில் கொடூர யுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடும்,” என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மத்திய இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி மற்றும் பௌத்த மதகுருமார்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதே வேளை, முஸ்லிம் பள்ளி கூடமொன்றிற்கு உதவியமைக்காக தான் விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர் கொண்டதாக பன்னல ஆனந்த தேரர் கூறுகின்றார்.

எதிர்கால சந்ததியினருக்காக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் எதிர்காலத்தில் யாழ்பாணத்திலுள்ள இந்து சமய பிள்ளைகளுக்கும் பள்ளிக் கூடக் கட்டடமொன்றை அமைத்துக் கொடுக்கப் போவதாகவும் இந்நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *