போரினால் சின்னாபின்னமான செளதியின் `ஷியா நகரம்`

சுன்னி முஸ்லீம் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதியில் இருந்த, தற்போது சவுதியில் உள்ள அவாமியா நகருக்குள் செல்ல பிபிசி செய்தியாளரான சல்லி நபிலுக்கு அரிய வாய்ப்பு கிடைத்தது. கடந்த சில மாதங்களாக ஷியா புரட்சிப் படைக்கும், அரசுக்கும் இடையே நடைபெறும் போரினால், அந்த பழமை வாய்ந்த நகரம் சிதைந்து போயுள்ளது.

`நீங்கள் இங்கு ஒரு சில நிமிடங்கள்தான் இருக்க முடியும். நாங்கள் `போ` என சொன்னதும், நீங்கள் போய்விட வேண்டும்` என செளதி போலிஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் மிக உறுதியாக தெரிவித்துவிட்டார். மேலும் அவாமியாவுக்கு செல்வதற்காக, ஆயுதம் தாங்கிய வாகனம் ஒன்றும் நமக்கு அளிக்கப்பட்டது.

சிறப்புப் படைகள் சுற்றி நின்று பாதுகாப்பு அளிக்க, நமது வாகனம் அவாமியா நகருக்குள் நகர்ந்து சென்றது. அதிகாரிகள் தங்கள் கமாண்டர்களை அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, எல்லாம் பாதுகாப்பாக சென்று கொண்டிருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொண்டே இருந்தனர்.

அவாமியா நகரின் பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசு கூறினாலும், தற்போது வரை பாதுகாப்பு என்பது அங்கு சீரான நிலையில் இல்லை.

பயங்கரவாத குழுக்களினால்தான் அவாமியாவில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாங்கள் அவாமியா நகருக்குள் நுழைந்த போது, அங்கு ஏற்பட்டிருந்த அழிவு அதிர்ச்சியை அளித்தது. நாங்கள் மொசூல் அல்லது அலப்போவில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும், ஒரு போர்ச்சூழல் அங்கு காணப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் எண்ணெய் வளம் அதிகமாக இருப்பதாக கருதப்படும் குவாடிஃப் பிராந்தியத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இங்கு 30,000 மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ஷியா முஸ்லீம்கள்.

ஒரு காலத்தில் மக்கள் அதிகம் வாழும் குடியிருப்பு பகுதியாக இருந்த இந்த நகரத்தில், தற்போது ஒன்றும் இல்லை. துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட கட்டிடங்கள், எரிந்த நிலையில் உள்ள கார்கள் மற்றும் கடைகள் ஆகியவை கடுமையான சண்டை நடந்ததற்கான சாட்சியங்களாக அங்கு எஞ்சியுள்ளன.

செளதி அரேபியாவில் உள்ள சிறுபான்மை இனமான ஷியா முஸ்லீம்களின் பிரதிநிதிகள், சுன்னி முஸ்லீம்களின் ஆட்சியில் தாங்கள் தொடர்ந்து பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகவும்,ஒதுக்கி வைக்கப்படுவதாகவும் தொடர்ந்து பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

`சுன்னியோ, ஷியாவோ, எங்கிருந்தும் தங்களுக்கு எதிர்ப்பு எழுவதை சவுதி அரச குடும்பம் விரும்புவதில்லை. ` என பெர்லினில் உள்ள மனித உரிமைக்கான ஐரோப்பா-செளதி சுன்னி அமைப்பின் இயக்குநரான அலி அடுபிசி என்னிடம் தெரிவித்தார்.

அவாமியா நகரை சுற்றிப் பார்த்ததில், நகரின் நடுவில் சில கனரக இயந்திரங்கள் நிற்பதை பார்க்க முடிந்தது. கடந்த மே மாதம், வளர்ச்சிப் பணிகள் எனக் கூறி இந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அல்-முசவாரா பகுதியை அதிகாரிகள் இடிக்கத் துவங்கினர்.

`80 வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன. இன்னும் நாங்கள் இடிக்க வேண்டிய தொலைவு 400 மீட்டர்கள் மட்டுமே. இவையெல்லாம் பாழடைந்த கட்டிடங்கள். இவற்றை புதிதாக கட்ட வேண்டும்.` என தற்போது அந்நகரின் பொறுப்பு மேயராக இருக்கும் எசம் அப்துல்லாடிஃப் அல்-முல்லா என்னிடம் கூறினார்.

`இங்கிருந்த குடும்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கான மாற்று வீடுகள் மற்றும் தேவைக்கு அதிகமான நிவாரணத் தொகையும் அளிக்கப்பட்டுள்ளது.` எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த இடிப்புப் பணிகள் துவங்கியதும், அவாமியாவில் அரசுடனான மோதல் வன்முறையாக வெடித்தது.

எதிர்ப்பை நசுக்கும் நோக்கில், காவல்துறை பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்றுவதாக ஷியா இன அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

ஜூலை மாதத்தின் இறுதியில், நகரின் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளை பாதுகாப்பு படையினர் மூடிவிட்டனர் எனவும், ஏற்கனவே நகருக்குள் தங்கியிருக்கும் மக்களுக்கு மருத்துவம் போன்ற எந்த அத்தியாவசிய உதவிகளையும் தர மறுத்துவிட்டனர் எனவும் அங்கிருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வன்முறையில் 3 வயது சிறுவன் உட்பட 20 பொதுமக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சண்டையில் இதுவரை 8 காவல்துறையினரும், நான்கு சிறப்புப் படை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சவுதி அரசு, பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படையினரின் மரணம் குறித்த எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

இந்த பகுதியில் பல காலமாக செயல்பட்டு வரும் ஆயுதக்குழுக்கள்தான் இந்த வன்முறை சம்பவங்களுக்கு காரணம் என சவுதி உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

அரசுப்படைகள் மீது ராக்கெட், வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கியினால் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

`ஆயுதக்குழுக்கள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி அவர்களை கொலை செய்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து மிரட்டுவதால், மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.` என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறையில் 20 பொதுமக்கள் மற்றும் புரட்சிக்குழுவை சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த பிரச்சனைக்கு மற்றொரு கதையும் கூறப்படுகிறது.

அவாமியாவை விட்டு சற்று முன் வெளியேறி, தற்போது ஜெர்மனியில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள சவுதி நபர் ஒருவரை நான் சந்தித்தேன்.

`பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு நடத்தும். இதனால் மிகவும் பயந்து போன நான், வீட்டை விட்டு வெளியேறாமலே பல நாட்கள் இருந்தேன்.` என அவர் கூறினார்.

தன்னுடைய அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்ட அந்த நபர், தற்போது வரை தான் ஆயுதம் எடுத்தது கிடையாது எனவும் ஆனால் சிலர் ஏன் ஆயுதங்களை கையில் எடுக்கிறார்கள் என்பதை தற்போது புரிந்து கொண்டதாகவும் தெரிவிக்கிறார்.

`செளதி அரேபியாவில் ஷியா அல்லது மாற்று மதத்தைச் சேர்ந்த நபருக்கு, மரண தண்டனை விதிக்கப்படுவது சாதாரணம். விடுதலை மற்றும் தங்களுடைய அடையாளத்திற்காக போரிடும் மக்களுக்கு, நியாயமற்ற முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும். ஆனால் அவர்கள் எப்போதும் அமைதியை கடைபிடிக்க மாட்டார்கள். யாராவது உங்களை சுட்டால், பதிலுக்கு நீங்களும் சுட வேண்டும்.` என அவர் என்னிடம் பேசினார்.

2011-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவாமியா நகரில் துவங்கிய ஷியா மக்களின் போராட்டத்தை நினைவு கூர்ந்த அந்த நபர், அப்போது அந்த பிராந்தியம் முழுவதும் எழுந்த `அரபு வசந்தம்` என்ற புரட்சி, மக்களை தெருவில் போராட தூண்டியது என தெரிவிக்கிறார்.

`நாங்கள் எப்போதும் அமைதியாக போராடக்கூடியவர்கள். ஆனால் பாதுகாப்புப் படைகள் எங்களை கலைக்க வெடிபொருட்களை பயன்படுத்துவார்கள்.` என அவர் கூறினார்.

கடந்த ஜுலை மாத இறுதியில் நகரின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டுவிட்டதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்..

அதிலிருந்து, நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு, போராட்டம் தொடர்பான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி அநியாயமான முறையில் 3 டஜன் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

சிறுவர்களாக இருந்த போது குற்றம் செய்ததாக தண்டனை விதிக்கப்பட்ட நால்வர் உட்பட சுமார் 14 போராட்டக்காரர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர்.

நம்முடைய குறுகிய கால அவாமியா பயணம், சற்று தூரத்திலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் தடைபட்டது.

துப்பாக்கியில் சுட்டது, காவல்துறையா அல்லது ஆயுதக்குழுவா என்பது நமக்கு தெரியாது. ஆனால் கமாண்டர் கூறியது போல நாம் இப்போது அங்கிருந்து கிளம்பியே ஆக வேண்டும்.

திரும்பிப் போகும் வழியில், என்னுடைய கார் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்க்கும் போது, அழிந்த இந்த நகருக்கு மீண்டும் எப்போது உயிர் கிடைக்கும் என நினைத்துப் பார்த்தேன்.

இதனை கூறுவது மிகவும் கடினம்தான். ஆனால் இந்த அமைதியின்மைக்கு இன்னும் பல காரணங்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *