உறைபனியில் உயிர் வாழ ஆல்கஹாலை நாடும் தங்க மீன்கள்!

தண்ணீர் பனியாக உறைந்த ஏரிகளில் தங்க மீன்கள் உயிர் பிழைத்திருப்பது எப்படி என்னும் ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உயிர் பிழைப்பதற்கான வழியாக, தங்கள் உடலில் உள்ள லேக்டிக் அமிலத்தை அவை எப்படி, ஏன் ஆல்கஹாலாக மாற்றுகின்றன என்பதை விஞ்ஞானிகள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்.

மோட்டார் வாகனங்களை ஓட்டுகிறவர்கள் உடலில் எவ்வளவு ஆல்கஹால் இருக்கலாம் என்று ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அளவை நிர்ணயித்துள்ளன. பல நாடுகள் நிர்ணயித்திருக்கும் இந்த அளவைக் காட்டிலும் உறைபனியில் உயிர்பிழைக்கும் சில தங்க மீன்களின் உடலில் அதிக அளவில் ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மனித உடலில் ஆல்கஹால் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வுக்கும் தங்க மீன்கள் குறித்த இந்த ஆராய்ச்சி உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்க மீன்கள் மற்றும் அவற்றின் கானிலை உறவினமான க்ரூசியன் க்ராப் ஆகியவற்றின் விநோதமான உயிர்பிழைத்திருக்கும் ஆற்றல் பற்றி 1980களில் இருந்தே விஞ்ஞானிகள் அறிந்திருக்கின்றனர்.

ஆக்சிஜன் இல்லாமல் மாதக்கணக்கில்

மனிதர்கள் உள்ளிட்ட பெரும்பாலான முதுகெலும்புள்ள விலங்குகள் ஆக்சிஜன் இல்லாவிட்டால் சில நிமிடங்களில் இறந்துவிடும். ஆனால், இந்த மீன்கள் வட ஐரோப்பாவின் பனி உறைந்த ஏரிகளிலும் குளங்களிலும் ஆக்சிஜன் இல்லாமல் சில மாதங்கள் வரை உயிரோடு இருக்கும் ஆற்றல் பெற்றவை.

இந்த ஆற்றலுக்குப் பின்னால் உள்ள மூலக்கூறு பொறியமைவை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தை செல்களின் ஆற்றல் மையமான மைட்டோகான்ட்ரியா நோக்கிச் செலுத்துவதற்கு பெரும்பாலான உயிரினங்களில் ஒரே ஒரு புரோட்டின் தொகுப்பு மட்டுமே உண்டு.

ஆக்சிஜன் இல்லாத நிலையில், உட்கொள்ளப்படும் கார்போஹைட்ரேட்டுகள் லேக்டிக் அமிலங்களாக மாற்றப்படுகின்றன. இவற்றை வெளியேற்ற முடியாத நிலையில் இந்த மீன்கள் ஓரிரு நிமிடங்களில் இறந்துவிடும்.

ஆனால், அதிருஷ்டவசமாக இந்த மீன்கள் மற்றொரு புரோட்டின் தொகுப்பை பெற்றுள்ளன. இந்த இரண்டாம் புரோட்டின் தொகுப்பு, ஆக்சிஜன் இல்லாத நிலையில் செயல்பட்டு லேக்டிக் அமிலத்தை ஆல்கஹாலாக மாற்றுகின்றன. பிறகு இந்த ஆல்கஹால் செதில்கள் வழியாக வெளியேற்றப்படுகின்றன.

ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் இந்த இரண்டாம் பாதை செயல்படுத்தப்படுகிறது என்று பிபிசி செய்தியிடம் தெரிவித்தார் லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மைக்கேல் பெரன்பிரிங்க்.

பனிக்கட்டி இந்த மீன்களை காற்றில் இருந்து பிரித்துவிடுகின்றன. எனவே, குளம் உறைபனி நிலைக்கு வரும்போது இந்த மீன்கள் கிடைக்கும் எல்லா ஆக்சிஜனையும் நுகர்ந்தபின், உயிர்பிழைக்க ஆல்கஹாலை நாடுகின்றன.

கண்ணாடிக் குடுவையில் தங்க மீன்கள்.

காற்றில்லாத, உறைபனி நிலை எவ்வளவு நீளமாக நீடிக்கிறதோ அவ்வளவு தூரம் இந்த மீன்களில் உள்ள ஆல்கஹால் அளவு அதிகமாக இருக்கும்.

அளந்து பார்த்தால் 100 மிலி ரத்தத்தில் 50 மிலிகிராம் அளவுக்கும் மிகுதியாக ஆல்கஹால் உயர்ந்துவிடும். இந்த அளவானது டிரைவரின் உடலில் இருந்தால், ஸ்காட்லாந்திலும், வட ஐரோப்பிய நாடுகளிலும் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதாக மதிப்பிடப்படும் அளவு. எனவே இந்த மீன்கள் உண்மையில் “மதுவின் மயக்கத்தில்” இருக்கின்றன என்கிறார் டாக்டர் பெரன்பிரிங்க்.

இந்த மீன்கள் உடலில் செதில் வரை ஆல்கஹால் நிரம்பி இருந்தாலும், இந்த ‘மது’ அவற்றைக் கொல்வதில்லை. மாறாக, குளிர்காலம் நீண்டகாலம் நீடித்தால் அவற்றின் கல்லீரலில் சேர்த்துவைத்த உணவு மொத்தமும் தீர்ந்துபோய் அவை இறந்துவிடுகின்றன.

பரிணாம வளர்ச்சியில் தகவமைதல் குறித்து கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடத்தை இது வழங்குகிறது. இத் தகவமைதல் முறை இரண்டாவது ஜீன் தொகுப்பை உருவாக்குகிறது. உயிரினங்கள் தங்கள் முதன்மையான பணிகளை மேற்கொள்ளவும், பயனுள்ள பணிகளைச் செய்யும்பட்சத்தில் பின்னணியில் வேறொரு தொகுப்பை பராமரிக்கவும் இத் தகவமைதல் முறை உதவுகிறது.

எத்தனால் உற்பத்தியின் மூலமாக இத்தகைய கடினமான சுற்றுச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உயிர்பிழைக்கும் ஒரே மீன் இனமாக இருக்கிறது க்ரூசியன் க்ராப். இதன் மூலம், நல்ல ஆக்சிஜன் இருக்கும் நீரில் இவை தொடர்பு கொண்டு வாழும் மீன் இனங்களின் போட்டியையும், அவற்றால் வேட்டையாடப்படும் வாய்ப்பையும் இவை தவிர்க்கின்றன என்கிறார் நார்வேயின் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கேத்ரைன் எலிசபெத் ஃபேஜர்ன்ஸ்.

இந்த க்ரூசியன் க்ராப்பின் மரபியல் உறவுக்கார இனமான தங்க மீன்கள், மனிதர்கள் வளர்க்கும் மீன் இனங்களிலேயே அழுத்தங்களில் இருந்து எளிதாக மீண்டு வரும் இனமாக இருப்பது ஆச்சரியம் இல்லை என்கிறார் இவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *