கூட்டு எதிர்க்கட்சியினருக்கு சவால்: ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

கூட்டு எதிர் கட்சியினர் தற்போதைய நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றினாலும், அவர்கள் தனது ஆசிர்வாதம் இல்லாமல் அரசாங்கமொன்றை அமைக்க முடியாதென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.

பொலனறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெற்று தாங்கள் விரைவில் அரசாங்கமொன்றை அமைக்கப்போவதாக கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் ஊடகங்கள் முலம் கருத்து தெரிவித்துள்ளதாக கூறினார்.

அதன் பின்னர் அரசாங்கமும் ஜனாதிபதியும் வீழ்த்தப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இலங்கை அரசியல் யாப்பின்படி தனது அனுமதியின்றி எவருக்கும் அரசாங்கமொன்றை அமைக்க முடியாதென்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம் ஒன்றை அமைப்பது என்பது கூட்டு எதிர் கட்சியினர் காணும் ஒரு கனவு ஏன்று கூறிய ஜனாதிபதி சிறிசேன தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.

ஊழல்கள் நிறைந்த நபர்களுடன் சேர்ந்து தான் அரசாங்கமொன்றை அமைக்க போவதில்லை என்று கூறிய ஜனாதிபதி தற்போதைய அரசாங்கத்துக்குள் ஊழல்கள் ஏற்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திகர் கட்சியின் 18 அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறப்போவதாக அக்கட்சியின் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க, அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதேபோன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் தாங்கள் தனி அரசாங்கமொன்றை அமைக்கப்போவதாக ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துவருகின்றனர்.

இதேவேளை தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டுவரப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இந்த பின்னணியில் ஜனாதிபதி சிறிசேன இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *