இந்தியா பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத ரணம்

காலணி நாடான இந்தியா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-வது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் முதல் பாகம் இது.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

டெல்லிக்கும், இஸ்லாமாபாதுக்கும் இடையே இருப்பதென்னவோ விமானப் பயணத்தில் விரைந்து கடந்துவிடக்கூடிய 700 கி.மீ. தொலைவுதான். ஆனால் இரு நாடுகளின் தலைநகரங்களுக்கு இடையே நேரடி விமானச்சேவை கிடையாது. 70 ஆண்டுகளாக இரு நாடுகளிடையே நிலவும் பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் பதற்றத்தின் விளைவு இதற்கு காரணம்.

line break

ஆகஸ்ட் 1947 இல் இந்திய பிரிவினை

• நவீன காலத்தின் மிகப்பெரிய அழிவுகளில் ஒன்று; போர், பஞ்சம் அல்லாத காலங்களில் நடைபெற்ற உலகிலேயே பெரிய மக்கள் இடப்பெயர்வு.

• இந்தியா, பாகிஸ்தான் என புதிதாக இரண்டு சுதந்திர நாடுகள் உருவாக்கப்பட்டன.

• ஏறக்குறைய 12 மில்லியன் மக்கள் அகதிகள் ஆனார்கள்.

• இரு தரப்பிலும் அரை மில்லியன் முதல் ஒரு மில்லியன் வரையிலான மக்கள் கொடூர சம்பவங்களில் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் வெளிபடும் ஒரு தளம் கிரிக்கெட். இரு நாடுகளும் சமீபத்தில் சாம்பியன் கோப்பை இறுதிப்போட்டியில் மோதினாலும், போட்டி நடந்த இடம் லண்டன்.

இரு நாடுகளும் இணைந்து தங்கள் சொந்த மண்ணில் கிரிக்கெட் விளையாடுவது இல்லை. இரு நாடுகளின் பண்பாடும், வரலாறும் பொதுவானதாக இருந்தாலும், எதிர்த் தரப்பினராகக்கூட இல்லை, எதிரிகளாகவே பார்க்கப்படுகின்றன.

விடுதலைபெற்றதில் இருந்து இரு நாடுகளும் மூன்றுமுறை போரிட்டுள்ளன. 1999-ல் இரு நாட்டு ராணுவங்களும் மோதியபோது, முறைப்படியான போர் அறிவிப்பு செய்யப்படவில்லை என்பதால் சிலர் நான்குமுறை போர் நடந்ததாக சொல்வதுண்டு.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வு
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionதெற்கு ஆசிய மண்ணில் இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆகின்றன.

உலகில் நீண்டகாலமாக நிலவும் புவிசார் அரசியல் பிளவுகளில் இந்தியா பாகிஸ்தான் இடையில் நிலவும் இறுக்கமும் ஒன்று. இந்த இறுக்கமே இரு நாடுகளையும் தங்களுக்கென அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தூண்டின. இந்த மோதல், பிராந்திய சர்ச்சை என்ற வரையறையைத் தாண்டி பெரிய ஆபத்துகளை உள்ளடக்கியது.

பிரிவினையின் தாக்கம்:

தனது மிகப்பெரிய குடியேற்ற நாடான இந்தியா மீதான ஆளுகையை 15 ஆகஸ்ட், 1947 அன்று கைவிட்ட பிரிட்டன், பலமாத இழுபறிக்குப் பிறகு நாட்டை இரண்டாகப் பிரிக்க ஒப்புக்கொண்டது. இந்துக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியா, முஸ்லிம்களுக்குப் பாதகமாக இருக்கும் என்ற கவலையை எதிர்கொள்ளும் விதமாக, முதலில் முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது.

பஞ்சாப், வங்காளம் ஆகிய இருபெரும் மாகாணங்களின் பிரிவினையும் இதில் உள்ளடங்கியது. புதிய சர்வதேச எல்லை எங்கே அமையும் என்ற விவரம் விடுதலைக்குப் பிறகு இரண்டு நாள் கழித்தே வெளியிடப்பட்டது.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வு
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஜவகர்லால் நேரு (இடது), இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் (மத்தியில்) மற்றும் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் தலைவர் முகமது அலி ஜின்னா (வலது) ஆகியோர் பிரிவினை குறித்து 1947-இல் விவாதிக்கின்றனர்.

நவீன காலத்தின் மிகப்பெரிய அழிவுகளில் ஒன்றும், போர், பஞ்சம் அல்லாத காலங்களில் நடைபெற்ற உலகிலேயே பெரிய மக்கள் இடப் பெயர்வும் இதனால் நடந்தது. மிகச்சரியான எண்ணிக்கையை யாராலும் மதிப்பிடமுடியவில்லை. ஆனால் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு இடம் பெயர விரும்பிய 12 மில்லியன் மக்கள் அகதிகளானது, சரித்திரத்தின் சோகம்.

இரு தரப்பிலும் அரை மில்லியன் முதல் ஒரு மில்லியன் வரையிலான மக்கள் கொடூர சம்பவங்களில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பெண்கள் எதிர் மதத்தைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்டனர். குறிப்பாக பஞ்சாபில், பல தலைமுறைகளாக சேர்ந்து வாழ்ந்துவந்த, ஒரே மொழியைப் பேசிய இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஆகியோரிடையே பிளவு ஏற்பட்டது. முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும் சீக்கியர்கள் இந்தியாவுக்கும் இடம் பெயர்ந்தனர்.

போர்க்களத்தையும், மோதும் ராணுவங்களையும் கொண்டிருந்த உள்நாட்டுப் போரல்ல இது என்றாலும், நடைபெற்ற வன்முறைகள் தற்செயலானவையல்ல. பல்வேறு தரப்பின் ஆயுதக் குழுக்களும், கும்பல்களும் எதிர்தரப்புக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு செயல்பட்டன. சக மனிதர்களை, விரோதிகளாக்கியது பிரிவினை.

காயங்கள் புரையோடி வடுக்களாகின; ஆனால் யாரும் பொறுப்பாக்கப்படவில்லை, எந்தவித சமாதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நடந்த சம்பவங்கள் பற்றிய விவரங்களும், பதிவுகளும் மெளனத்தில் புதைந்து, சொல்லப்படாத கதைகளாக அமிழ்ந்துபோயின.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வு
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption7 ஆகஸ்டு 1947 அன்று டெல்லியில் இருந்து பாகிஸ்தான் செல்லும் ரயிலில் ஏறும் இஸ்லாமியப் பெண்கள்.

நடந்த பயங்கரங்களைப் பதிவு செய்யும் முயற்சிகளில் இலக்கியமும் சினிமாவும் வழிகண்டன. பிரிவினையின் அரசியல் குறித்தே வரலாற்று ஆசிரியர்களின் கவனம் குவிந்தது. இந்த மாபெரும் பிளவின் அனுபவங்கள், மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கங்களை நோக்கி அவர்களின் கவனம் திரும்ப நீண்டகாலம் பிடித்தது.

சம்பவங்களின் நேரடி சாட்சிகள் பெரும்பாலோர் இறந்துவிட்ட நிலையில் வாய்மொழி வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சிகள், கடந்த சில ஆண்டுகளாக தொடங்கியிருக்கிறது. இறந்தவர்களுக்கு பெரியளவிலான நினைவுச் சின்னங்களும் இல்லை. பிரிவினைக்கான நினைவுச் சின்னம் ஒன்று இந்தியப் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் 2016-ல்தான் அமைக்கப்பட்டது.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வு
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionமார்ச் 1947-இல் அமிர்தசரஸ் நகரைப் பாகிஸ்தானுடன் இணைக்க விரும்பிய இஸ்லாமியர்கள் மற்றும் அந்நகரை இந்தியாவிலேயே தக்க வைத்துக்கொள்ள விரும்பிய இந்துக்கள் மற்றும் சீக்கியர் ஆகியோரிடையே கடும் மோதல்கள் நடந்தன

பிரிவினை, இந்தியா பாகிஸ்தானிடையே நச்சைக் கலந்தது; தெற்காசிய புவிஅரசியல் ஒட்டுமொத்தமாக சிதைந்துப்போனது. பிரிவினையின்போது, மொத்தம் 2000கி.மீ பரப்பளவைக் கொண்ட இரண்டு பகுதிகளாக இருந்த பாகிஸ்தான், 1971இல் கிழக்குப் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று வங்கதேசம் என்ற புது நாடாக உருவானதும் எல்லைகள் சுருங்கிப்போயின. 1947இல் சுதந்திரத்தின்போது, பிரிவினையால் இரண்டாக துண்டாடப்பட்டு, இந்தியா பாகிஸ்தான் என பிரிந்த நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் மீண்டும் இரண்டானது.

சுதந்திரத்திற்கான ஏற்பாட்டின்போது, இமாலயத்தின் அடிவாரத்தில் இருந்த காஷ்மீரின் அரசர் இந்தியாவுடன் இணைய முடிவெடுத்தார். இந்து அரசர் இந்தியாவுடன் இணைய முடிவை எடுக்க, ஆனால் மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாக இருந்ததால், சுதந்திரமடைந்த சில மாதங்களில் காஷ்மீர் மீதான உரிமை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை எழுந்தது. சிக்கலான மோதல்கள் தீர்க்கப்படாத நிலையில், காஷ்மீர் பிரச்சனையே இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளிடையே பிணக்குக்கு பிரதான காரணமானது. இதர பிரச்சனைகள் பின்தங்கிப்போயின.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வு
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionபிரிவினைக்கு முன்பு கொல்கத்தாவில் (கல்கத்தா) 1946-ஆம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரத்தில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர்

காஷ்மீர்: இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிடுவது ஏன்?

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்தியா குற்றம் சாட்டும் நிலையில், பலூசிஸ்தான் போன்ற பகுதிகளில் பிரிவினைவாதக் குழுக்களுடன் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.

இருநாட்டு அரசியல் தலைவர்களும் அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும்போது, உறவுகளில் திருப்புமுனை தோன்றும் என்ற நம்பிக்கை எழும். ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு என்பது கானல்நீராகவே இருக்கின்றது.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வு
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஇரு நாடுகளும் முழுமையாக சொந்தம் கொண்டாடினாலும், பகுதி அளவே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையை வாழும் காஷ்மீர் விவகாரத்தில் இரண்டு போர்களில் ஈடுபட்டுள்ளன.

அண்டை நாடான பாகிஸ்தானைவிட, தொலைதூரத்தில் உள்ள நைஜீரியா, பெல்ஜியம், தென்னாஃபிரிக்கா போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு இணக்கமான உறவு உள்ளது. இந்தியாவின் பிரம்மாண்டமான ஹிந்தி-மொழி திரைப்படத் துறை, பாலிவுட் என்ற பெயரில் பாகிஸ்தானில் பிரபலமாக இருக்கிறது. பாகிஸ்தானின் தொலைக்காட்சித் தொடர்கள் இந்தியாவில் விருப்பத்துடன் பார்க்கப்படுகின்றன. எதுஎப்படியிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார இணைப்புகள் பலவீனமாக உள்ளன; உறவுகள் பாதிப்படைந்துள்ளன.

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் அட்டாரி-வாகா எல்லைப் பகுதி, இருபகுதிகளிலும் பலரை ஈர்ப்பதாக உள்ளது. நீண்ட எல்லைப்பகுதியை கொண்டுள்ள இரு நாடுகளும் சில எல்லை கடப்பு வழிகளையே கொண்டுள்ளது.

பாகிஸ்தானில், ராணுவமும், உளவுப் பிரிவும் அதிக அதிகாரமும் சக்தியும் பெற்று விளங்குவதும், அங்கு ராணுவ ஆட்சி பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்துள்ளதும் கவனத்தில் கொள்ளக்கூடியது.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வு
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஅமிர்தசரஸ் அருகே உள்ள வாகா எல்லையில் தினசரி நிகழும் இரு நாட்டுக் கொடிகளும் இறக்கப்படும் நிகழ்வு இரு தரப்பிலிருந்தும் பல பார்வையாளர்களை ஈர்க்கிறது

தனது மிகப்பெரிய அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து ராணுவ அச்சுறுத்தல் இருப்பதாக பாகிஸ்தானில் பலர் கருதுவதால், அங்கு ஆயுதப்படைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டு, ஜனநாயகப் பாதையில் செல்வதில் சுணக்க நிலை காணப்படுகிறது.

பாகிஸ்தானின் 200 மில்லியன் மக்கள்த்தொகையில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள். இந்தியாவின் 1,300 மில்லியன் குடிமக்களில் ஏழில் ஒரு பங்கு இஸ்லாம் மதத்தினர்.

2050களில் இந்தோனேஷியாவை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடாக இந்தியா முன்னேறிவிடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்திலும், பிற துறைகளிலும் இஸ்லாம் சமூகத்தினரின் பங்கு குறைவாகவே இருக்கிறது.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வு
படத்தின் காப்புரிமைREUTERS
Image captionதங்கள் நாட்டின் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடும் பாகிஸ்தான் ரசிகர்கள்

இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் தங்கள் நாட்டைப் பற்றி பெருமிதம் கொண்டுள்ளனர் என்பதோடு, தேசபக்தி என்பது இரு நாட்டு மக்களிடையே சக்திவாய்ந்த ஆயுதமாக இருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின்போது அது ஆக்ரோஷமாக வெளிப்படும். ஆனால் இரு நாடுகளுமே 70 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த துயரத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை.

அண்மையில் இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றது யார்? பாகிஸ்தான் வலுவாக வெற்றியடைந்தது.

இந்தியாவில் பலர் இந்தத் தோல்வியை இயல்பானதாக எடுத்துக்கொண்டாலும், சமூக ஊடகங்களும், சில இந்திய செய்தி ஊடகங்களும் சீற்றத்தை வெளிப்படுத்தின. தோல்வியானது பழைய துயரத்தின் எச்சங்களை நினைவூட்டி, மிகவும் வேதனையான முடிவைத் தருவதாக பலர் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *