கத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு

நான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அந்நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கத்தார் நெருக்கடி ஏற்பட்ட பிறகு முதல் முறையாக பொதுமக்களுக்கு உரையாற்றிய ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி, எந்த தீர்வாக இருந்தாலும் அது கத்தாரின் இறையாண்மையை மதிப்பதாக இருக்க வேண்டும் என்றார்.

செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நான்கு நாடுகள், பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக கத்தார் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன. மேலும், ஈரானுடன் அதிக நெருக்கம் காட்டுவதாக்க் கூறி கடந்த ஜூன் மாதம் கத்தார் உடனான ராஜிய உறவுகளை துண்டித்துக் கொண்டன. அதனை தொடர்ந்து, நிலைமையை சரிசெய்ய கத்தாருக்கு தொடர்ச்சியான கோரிக்கைகளை அரபு நாடுகள் விடுத்திருந்தன.

பயங்கரவாதத்திற்கு உதவுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை கத்தார் மறுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஅமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி

தொலைக்காட்சி ஊடாக பேசிய எமிர், கத்தாருக்கு எதிராக பரப்பப்பட்டுவரும் தீங்கிழைக்கும் பொய் பிரசாரத்தைக் கண்டிப்பதாகவும், அதேசமயம் கத்தார் மக்களின் எதிர்த்து நிற்கும் திறனை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

”அரசாங்கங்களுக்கு இடையே நிலவும் அரசியல் வேற்றுமைகளால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று அவர் தெரிவித்தார்.

”கத்தாரின் இறையாண்மை மதிக்கப்பட்டால், நிலுவையிலுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாங்கள் திறந்த மனதோடு பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம்” என்று அமீர் கூறியுள்ளார்.

நான்கு அரபு நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடை காரணமாக எரிவாயு வளம் நிறைந்த எமிரேட் நாடு தனது 2.7 மில்லியன் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தற்போது கடல் மற்றும் வான் வழியாக உணவுகளை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *