75 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தம்பதியர் சடலங்கள் ஆல்ப்ஸ் மலையிலிருந்து மீட்பு

ஆல்ப்ஸ் மலைபடத்தின் காப்புரிமைFABRICE COFFRINI
Image captionஆல்ப்ஸ் மலை

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைகளில் 75 ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன ஒரு தம்பதியரின் சடலங்கள், பனியாற்றின் அளவு குறைந்திருக்கும் நிலையில் தற்போது கிடைத்துள்ளன.

மர்செலின் மற்றும் ஃப்ரான்சின் டுமெளலின் தம்பதிகள், 1942ஆம் ஆண்டு, வாலைஸ் கண்டோனில் மாடுகளை புல்வெளியில் வைத்து பால் கரக்க அழைத்துச் சென்றனர்.

அதன்பிறகு அவர்களை காணவில்லை.

தற்போது, கடல்மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் மீட்டருக்கு மேல் உள்ள பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏழு குழந்தைகளுக்கு பெற்றோரான இவர்களின் சடலங்கள் சிதைந்து போகாமல், நல்ல நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெற்றோரை இத்தனை ஆண்டுகளாக தாங்கள் அனைவரும் தேடி வந்ததாக, தம்பதியினரின் இளைய மகள் மர்சிலினெ உட்ரி டுமெளனின், சுவிஸ் ஊடகங்களில் தெரிவித்தார்.

தற்போது பெற்றோரின் உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் கிடைத்திருப்பதால், அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படும்போது, தான் வெண்ணிற உடை அணியப்போவதாக அவர் தெரிவித்தார்.

வெண்ணிறம் நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கூறும் மர்சிலினெ உட்ரி டுமெளன், தான் ஒருபோதும் நம்பிக்கையை இழந்ததில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இது பற்றி லெஸ் ட்யபிள்ரெட்ஸ் ரிசார்ட்ஸ் இயக்குநர் பெர்ன்ஹார்ட் கூறுகையில், தமது நிறுவன ஊழியர் பனிமலையில் பணியில் ஈடுபட்டபோது, கண்ணாடி பாட்டில்கள், ஆண் மற்றும் பெண்ணின் ஷுக்கள் பனியில் புதைந்ததைக் கண்டதாகக் கூறினார்.

அங்கு தோண்டிப் பார்த்தபோது, தம்பதியரின் சடலங்கள் அருகருகே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *