கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த அதே பெயர் கொண்ட குழந்தை அகதி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சிரியா அகதிகளின் மகனான, குழந்தை ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்துள்ளார்.

தங்களுக்கு தஞ்சம் அளித்த நாட்டிற்கு நன்றி சொல்லும் வகையில், சிரியா அகதி தம்பதியர் கனடாவில் பிறந்த தங்கள் குழந்தைக்கு ஜஸ்டின் ட்ரூடோ என்று பிரதமரின் பெயரையே சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

பிறந்து இரண்டு மாதமே ஆகியுள்ள இந்த ஆண் குழந்தையின் முழு பெயர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதம் பிலான் என்பதாகும்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற கால்காரி ஸ்டாம்பேடு காலை உணவு நிகழ்ச்சியின்போது, கனட பிரதமர் இந்த குழந்தையை தூக்கி வைத்திருந்தபோது, அது இதமாக அவருடைய மார்பில் சற்றுநேரம் தூங்கியது.

சிரியாவில் நடைபெறும் போரினால், இந்த குழந்தையின் பெற்றோரும், இரண்டு குழந்தைகளும் உயிர் தப்பியோடிய பல மாதங்களுக்கு பின்னர், இந்த ஆண் குழந்தை கால்காரியில் கடந்த மே மாதம்தான் பிறந்தது.

இந்த பெற்றோர் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸை புகழ்கின்றனர்.

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த குழந்தை ஜஸ்டின் ட்ரூடோ
படத்தின் காப்புரிமைFACEBOOK/MUHAMMAD BILAN

கடந்த ஆண்டு இந்த குடும்பத்தினர் மான்ட்ரலில் வந்து இறங்கியபோது, பிற சிரியா அகதிகளை நேரில் சென்று வரவேற்றதைபோல, கனடா பிரதமர் அங்கு சென்று வாழ்த்தி வரவேற்க முடியவில்லை.

ஆனால், முகமது மற்றும் அஃபிரா பிலான் தங்களுடைய நன்றியை ஏதாவது வழியில் கனடா பிரதமருக்கு தெரிவிக்க வேண்டும் என்று எண்ணினர். எனவே தங்களுக்கு பிறந்த மகனுக்கு அவருடைய பெயரையே சூட்டி மகிழ்ந்தனர்.

2015 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2017 ஜனவரி வரை 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிரியா அகதிகள் கனடாவில் குடியேறியுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் கால்காரியில் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தின் கடைசியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் 7 நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு தடை விதித்தார்,

அப்போது, சித்ரவதை, பயங்கரவாதம் மற்றும் போரால் உயிர் தப்பியோடி வருவோருக்கு உதவுவதற்கு தன்னுடைய அரசின் அர்ப்பணத்தை உறுதி செய்து பிரதமர் ட்ரூடோ சமூக உடகங்களில் தகவல் வெளியிட்டிருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒன்டாரியோவில் வாழும் சிரியா தம்பதியர் கனடா பிரதமருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ‘ஜஸ்டின்’ என்று பெயரிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *