இலங்கை நெடுந்தீவில் குதிரைகளைப் பாதுகாக்க கள ஆய்வுக்குழு

யாழ்ப்பாணத்திற்கு வடக்கே அமைந்துள்ள தீவுகளில் ஒன்றாகிய நெடுந்தீவு திவில் குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார்.

நெடுந்தீவில் நிலவுகின்ற மோசமான வறட்சி காரணமாக, அங்குள்ள குதிரைகள் உயிரிழக்க நேர்ந்துள்ளதையடுத்தே, வடமாகாண சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Sri Lanka Neduntheevu Horse death due to drought
Image captionவரட்சியால் இதுவரை ஆறு குதிரைகள் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வண்டுள்ளன. குடிப்பதற்கு நீர் இல்லாமலும், மேய்ச்சலுக்கென போதிய புல் இல்லாமலும் ஆறு குதிரைகள் வரையில் மடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தலைமையிலான இக்குழுவில் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

Sri Lanka Neduntheevu Horse death due to drought
Image captionகள ஆய்வுக்குப் பின் குதிரைகளைப் பாதுகாப்பது குறித்து அறிக்கை தயாரிக்கப்படும்.

நெடுந்தீவுக்கு இன்று வியாழக்கிழமை பயணமாகியுள்ள இந்தக் குழு, அங்கு குதிரைகள் வாழுகின்ற பிரதேசங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டதுடன், நெடுந்தீவு பிரதேச செயலக அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோதுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

இந்தக்குழு குதிரைகளை அழிவில் இருந்து, பேணி பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அடையாளங்கண்டு, அறிக்கை தயாரிக்கவுள்ளது.

இந்த ஆய்வு நடவடிக்கைகள் இரண்டு வார காலம் நடைபெறும் எனவும் ஆய்வின் முடிவில் அறிக்கையொன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவுக் குதிரைகள் போத்துக்கேயர்களினால், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்கள் ஆகும்.

மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழுகின்ற குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகத்தைச் சேர்ந்தது என உயிரியலாளர்களால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட சுற்றுலா சிறப்பு மிக்க நெடுந்தீவில், 400க்கும் மேற்பட்ட குதிரைகள் இருப்பதாகக் கணிப்பிடப்பட்டிருக்கின்றது.

சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற உயிரியல் சொத்தாகவும் இந்தக் குதிரைகள் திகழ்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *