ஆளில்லா விமானக் காவல்துறை : பிரிட்டன்

பிரிட்டன் காவல்துறை தனது முதலாவது முழுநேர ஆளில்லா விமானப்பிரிவை ஆரம்பித்துள்ளது.

Drone எனப்படும் இந்த ஆளில்லா விமான காவல்பிரிவு, காணாமல்போனவர்கள், சாலைவிபத்துகள் உள்ளிட்ட பெரிய குற்றச்சம்பவங்களை புலனாய்வதற்கு உதவுமென பிரிட்டன் காவல்துறை நம்புகிறது.

காவல்துறைக்கு பல பத்தாயிரம் ஸ்டெர்லிங் பவுண்ட்களை சேமிக்க இவை உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை காவல்துறையில் ட்ரோன் எனப்படும் ஆளில்லாவிமானப்படைப்பிரிவு என்பது கேள்விப்படாத ஒன்று.

ஆனால் இன்று இங்கிலாந்தின் இரண்டு காவல்துறைசரகங்கள் இணைந்து பிரிட்டனின் முதலாவது முழுநேர ஆளில்லா விமானப்படைப்பிரிவை உருவாக்கியுள்ளன.

அதன் ஆளில்லா விமானங்கள் ஐந்தும் 24 மணிநேரமும் செயற்படும்.

“ஹெலிகாப்டர் என்னவெல்லாம் செய்யுமோ அது அனைத்தையும் இது செய்யும். அதிலுள்ள நுட்பமான கேமெராக்கள் பலதையும் வேகமாக செய்யவல்லவை. ஒரு விபத்து நடந்ததாக தகவல் கிடைத்ததும் காரில் செல்லும்போதே ட்ரோனை சம்பவ இடத்து எடுத்துச்சென்று உடனடியாக செயற்படச்செய்யமுடியும். அதற்குப்பின் ஹெலிகாப்டரை கோரலாம்”, என்கிறார் பிரிட்டன் காவல்துறையின் ட்ரோன் பிரிவு மேலாளர் ஆண்ட்ரூ ஹாமில்டன்.

முன்பு ஹெலிகாப்டர்களால் மட்டுமே செய்யமுடிந்த இத்தகைய செயல்களை இப்போது ட்ரோன்கள் செய்கின்றன. ஹெலிகாப்டர்கள் செயற்பட மணிக்கு ஆயிரம் டாலர் செலவாகும். ஆனால் ட்ரோன்களுக்கு அவ்வளவு செலவாவதில்லை.

எனவே காணாமல்போனவரை தேடுவது, குற்றம் நடந்த இடத்தை ஆராய்வது, சாலை விபத்து முதல் இயற்கை பேரழிவுவரை பல இடங்களை படம்பிடிக்க ஆளில்லா விமானங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

ட்ரோன் படம்பிடிக்கும் காட்சிகளை காவல்துறையின் மத்திய கண்காணிப்பு அறைகளுக்கே நேரலையாக அனுப்பும் வசதியும் விரைவில் வருமென அதிகாரிகள் நம்புகிறார்கள்.

காவல்துறை அதிகாரியின் தோளில் பொருத்தக்கூடிய ட்ரோன்களுக்கான காப்புரிமைகோரி அமெசான் நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது. இவை காவல்துறையின் புலனாய்வில் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றின் வடிவங்கள் மாறலாம்; வண்ணங்களும் மாறலாம். ஆனால் பிரிட்டிஷ் காவல்துறையின் அன்றாட செயற்பாட்டில் ட்ரோன்களின் பங்களிப்பு எதிர்காலத்தில் ஏராளமாக அதிகரிக்கும் என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *