கத்தார் பால் தேவைக்கு ஜெர்மனியில் இருந்து பறந்து வந்த மாடுகள்

சௌதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் கத்தாரை தனிமைப்படுத்தியுள்ள நிலையில், கத்தாரில் பால் விநியோகத்தை அதிகரிக்க மாடுகள் விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்பட்ட உள்ள 4000 மாடுகளில், முதல்கட்டமாக 165 ஹால்ஸ்டீன் பால் மாடுகள் ஜெர்மனியில் இருந்து கத்தார் வந்து சேர்ந்துள்ளன.

கத்தாரில் வாழும் 2.7 மில்லியன் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நாடு இறக்குமதி பொருட்களை நம்பியிருக்கும் நிலையில், பிற நாடுகள் விதித்திருக்கும் வான், கடல் மற்றும் நில வழி தடையின் காரணமாக கத்தாரில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அண்டை நாடுகள் விதித்த கோரிக்கைகளை கத்தார் நிராகரித்த நிலையில், அந்நாடு மீது புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சௌதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகள் எச்சரித்துள்ளன.

செவ்வாயன்று ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் வழியாக கத்தார் ஏர்வேஸ் சரக்கு விமானத்தில் மாடுகள் வந்தடைந்தன.

இதற்காகவே அமைக்கப்பட்ட புதிதாக பால் பண்ணைக்கு அம்மாடுகள் அழைத்துச் செல்லப்பட்டன.

கத்தார் பசுக்கள்படத்தின் காப்புரிமைPASCAL LE SEGRETAIN/GETTY IMAGES

கத்தார் நிறுவனமான பவர் இண்டர்நேஷனல் இம்மாடுகளை வாங்கியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட உள்ள அனைத்து மாடுகளும் வந்தபிறகு, நாட்டின் பால் தேவையை 30 சதவிகிதம் வரை பூர்த்தி செய்யலாம் என பவர் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் முத்தஸ் அல் காயாத், ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் கடந்த மாதம் தெரிவித்தார்.

அல் காயாத்தால் தொடங்கப்பட்டுள்ள ஒரு புதிய பால் நிறுவனத்தால், பொருட்கள் விற்கப்பட உள்ளன.

கத்தார், தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாவும், இரானுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டி, செளதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் கத்தார் மீது அமல்படுத்தியுள்ள தடை ஐந்து வாரங்களுக்கு மேலாக நீடிக்கிறது.

அண்டை நாடுகளால் தனிமைப்படுத்துவதற்கு முன்பு கத்தாரில் விற்கப்பட்ட பெரும்பாலான பால் பொருட்கள், சௌதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

துருக்கியில் இருந்து தயிரையும், மொரோக்கோ மற்றும் இரானில் இருந்து உலர்ந்த உணவு பொருட்களையும் கத்தார் தற்போது இறக்குமதி செய்யும் நிலையில், புதிய வர்த்தக வழிகள் மற்றும் உணவு வழங்கும் நாடுகளைத் தக்கவைக்க கத்தார் முயன்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *