மொசூலை கைப்பற்றியது இராக்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிற்கு எதிரான சண்டையில் வெற்றி பெற்ற இராக் படையினருக்கு வாழ்த்து தெரிவிக்க இராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி மொசூலிற்கு வருகை தந்துள்ளார்.

வீரர்களுடன் கைகுலுக்கும் பிரதமர் ஹைதர் அல் அபாடி
படத்தின் காப்புரிமைIRAQ PM OFFICE/TWITTER
Image captionவீரர்களுடன் கைகுலுக்கும் பிரதமர் ஹைதர் அல் அபாடி

அபாடி, மொசூலின் “விடுதலையையும், வெற்றியையும்” அறிவிக்க வந்துள்ளதாக அவரின் அதிகாரப்பூர்வ அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த வருடம் அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து மொசூலை திரும்பக் கைப்பற்ற அமெரிக்கா தலைமையிலான வான்வழி தாக்குதல்களின் ஆதரவோடு இராக் படைகள் சண்டையிட்டு வருகின்றன.

இராக்கின் சுன்னி அரபின் மையப்பகுதியை ஆக்கிரமித்து, இராக் மற்றும் சிரியாவில் `கலிபா` ஆட்சியை பிரகடனப்படுத்துவதற்கு முன்னதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு மொசூல் நகரை 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைப்பற்றியது.

மொசூலை கைப்பற்றியது இராக் படைகள்: பிரதமர் வாழ்த்து

குர்திய பெஷ்மெர்கா போராளிகள், சுன்னி அரபு பழங்குடியினர் மற்றும் ஷியா ஆயுததாரிகள் ஆகியோரும் சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மொசூல் நகரில் ஐஎஸ் அமைப்பினருக்கு எதிராக நடைபெற்ற இறுதிச் சண்டையில் வெற்றி பெற்றதையடுத்து “இராக்கிய ஆயுத படையினருக்கும், மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக” பிரதமர் வந்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.

மொசூலின் பழைய நகர பகுதிக்கு அருகில் சிறிய பகுதிகளை கைப்பற்றியிருக்கும் ஜிகாதிகளுக்கு எதிராக இராக் படைகள் சண்டையிட்டு வருகின்றன.

இருப்பினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில துப்பாக்கிச்சூடுகளும் வானை எட்டும் புகையையும் ஞாயிறன்று காணமுடிந்தது.

இராக் படைகள் முன்னேறிச் சென்ற போது டைக்ரஸ் நதியில் விழுந்து முப்பது ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மொசூலின் கிழக்கு பகுதிக்கு முழு சுதந்திரத்தை அரசாங்கம் அறிவித்தது. ஆனால் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள தெருக்கள் குறுகலாகவும், அதிக வளைவுகளும் இருப்பதால், அரசு அங்கு கடும் சவாலை சந்தித்து வந்தது.

2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 9 லட்சம் மக்கள் நகரைவிட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டதாகவும், அது போருக்கு முந்தைய மக்கள் தொகையில் பாதி என தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிராந்திய தாக்குதல் தொடங்கிய சமயத்திலிருந்து இராக்கில் தங்கள் பிடியில் வைத்திருந்த பெரும் பகுதிகளை ஐ.எஸ் அமைப்பினர் இழக்கத் தொடங்கினர்.

ஆனால் மொசூலை கைப்பற்றியது, ஐஎஸ் அமைப்பினர் அடியோடு வீழ்ந்துவிட்டார்கள் என்று கூற முடியாது என்றும் வேறு சில இடங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மேலும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும் மொசூலின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *