பசுவதை தடுப்பு என்ற பெயரில் காவல்துறை அத்துமீறுவதா?’ வியாபாரிகள் கோபம்

மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக மாடுகளை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களிடம் தமிழக காவல்துறை கடும் கெடுபிடியில் ஈடுபடுவதாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வர்த்தகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பசுவதை

மத்திய அரசு புதிதாக கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தமிழகத்தில் அந்தக் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படாத நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக காவல்துறையினர் கெடுபிடி காட்டுவதாக பிபிசியிடம் பேசிய கால்நடைச் சந்தை வியாபாரிகள் மற்றும் மாட்டு உரிமையாளர் நலச் சங்கத்தலைவர் சதாசிவம் குறிப்பிட்டார்.

இவ்வாறு பிடிபடும் மாடுகள் தனியார் கோ சாலையில் ஒப்படைக்கப்படுவதாகவும், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அந்த கோ சாலைகளிலிருந்து மாடுகளை அழைத்துச் செல்ல வந்தால், பல மாடுகள் இறந்துவிட்டதாக அந்த கோசாலைகளை நடத்துபவர்கள் சொல்வதாகவும் மாட்டு வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாடுகளை வாகனங்களில் அழைத்துச் செல்வது தொடர்பாக எந்த விதிமுறைகளையும் தெளிவாக காவல்துறை கூறுவதில்லை என்றும் திடீரென பிடிப்பது கோ சாலைகளில் ஒப்படைப்பது என்று செயல்படுவதாகவும் தமிழ்நாடு மாட்டிறைச்சி வியாபாரிகள் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த அன்பு வேந்தன் கூறினார்.

தமிழகத்தில் இயங்கும் பல தனியார் கோ சாலைகளில் இம்மாதிரி ஒப்படைக்கப்படும் மாடுகளை, அந்த கோ சாலைகளை நடத்துபவர்கள் விற்றுவிட்டு, மாடுகள் இறந்துவிட்டதாக மாட்டு உரிமையாளர்களிடம் கூறுவதாகவும் இப்படி கோ சாலைகளில் ஒப்படைக்கப்படும் மாடுகள் இறந்துவிட்டால், பிரேதப் பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை தாக்கல்செய்ய வேண்டுமென நீதிமன்ற உத்தரவு இருந்தும் இந்த கோ சாலைகள் இவ்வாறு செயல்படுவதாகவும் அன்புவேந்தன் குற்றம்சாட்டுகிறார்.

எல்லா மாவட்டங்களிலும் கோ சாலைகளை அரசே நடத்த வேண்டுமென்றும் வீதி மீறல்களுக்காக மாடுகள் பிடிபட்டால், அவற்றை அரசு கோ சாலைகளில்தான் வைத்துப் பராமரிக்க வேண்டுமென்றும் கோவையைச் சேர்ந்த மாட்டு வர்த்தகரான முஸ்தபா தெரிவித்தார்.

`லட்சக்கணக்கானோர் பாதிப்பு

மேலும், புதிதாக காட்டப்படும் கெடுபிடியின் காரணமாக மாட்டு இறைச்சி தொழில், மாட்டு எலும்பு விற்பனை, தோல் விற்பனை என பல தொழில்களில் ஈடுபட்டிருக்கும் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

பசுவதையைத் தடுக்கிறோம் என்ற பெயரில் காவல் துறையே வரம்பு மீறுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மத்திய அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களை மிரட்டிப் பணம் பறிப்பதாகவும் ஊடகச் செய்திகளில்கூட மாட்டுக் கடத்தல்காரர்கள் என்று குறிப்பிடுவதாகவும் அன்பு வேந்தன் சுட்டிக்காட்டினார்.

மாட்டுச் சந்தை

வட இந்திய மாநிலங்களில் மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்துவரும் நிலையில், தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக பழனியில் மாடுகளை விலைக்கு வாங்கி, ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று, ஒரு ஜீயர் மற்றும் அவருடன் சென்றவர்களால் நிறுத்தப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு மாட்டு வர்த்தகர்கள், அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக கலவரம் ஏற்படவே காவல்துறை தடியடி நடத்தியது.

இதற்கு முன்பாக பொன்னேரி, பெருந்துறை ஆகிய இடங்களிலும் மாடுகள் பிடிக்கப்பட்டு கோ சாலைகளில் ஒப்படைக்கப்பட்டன.

மத்திய அரசின் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பாகவே, கடந்த 2015ஆம் ஆண்டில் சேலம் – கோவை சாலையில் 50 மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று இந்து அமைப்பினரால் நிறுத்தப்பட்டது. மாடுகளைக் கடத்தியதாக காவல்துறை வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்கிடையில் வாகனத்தில் இருந்த 3 மாடுகள் இறந்துபோயின, மீதமுள்ள 47 மாடுகள் கோ சாலை ஒன்றில் ஒப்படைக்கப்பட்டன.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவைப் பெற்று மாட்டு வர்த்தகர்கள் கோ சாலையிலிருந்து மாடுகளைப் பெற வந்தபோது, 47 மாடுகளில் 32 மாடுகள் இறந்துவிட்டதாக கோ சாலை நிர்வாகம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *