இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர்
இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஆளுநராக பதவி வகித்த ஓய்வு பெற்ற சிவில் அதிகாரியான ஓஸ்ரின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலராக பதவியேற்றுள்ளார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதியின் செயலராக பணியாற்றிய மூத்த சிவில் அதிகாரியான பி.பி.அபேயகோன் தனது தனிப்பட்ட தேவையின் நிமித்தம் பதவியை ராஜிநாமா செய்துள்ளதையடுத்தே அந்த இடத்திற்கு ஓஸ்ரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள. ரோஹித பொகொல்லாகமவை சந்தித்த மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கொழும்பில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.