”சைட்டம்” தனியார் மருத்துவ கல்லூரியை இலங்கை அரசு ஏற்பதில் இழுபறி

இலங்கையில் சர்ச்சைக்குரிய ”சைட்டம்” எனப்படும் தனியார் மருத்துவ் கல்லூரியை அரசு பொறுப்பேற்று நடத்துவது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் இழுபறி நிலை தொடர்ந்து வருகின்றது.

இந்த வாரம் கூடிய அமைச்சரவையில் இது தொடர்பாக ஆய்ந்து எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி இந்த தனியார் மருத்துவக் கல்லூரியை அரசு எடுத்துக் கொண்டாலும் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே அரசுடமையாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

3.55 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ கல்லூரியை அரசாங்கத்திற்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அந்நிறுவனத்தினால் அரசு வங்கியொன்றிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையை 10 வருடங்களுக்குள் செலுத்த வேண்டியுள்ளது.

இதன் காரணமாக குறித்த 10 வருட காலத்தில் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் குழுவொன்றின் கீழ் நிர்வாகம் கொண்டு வரப்பட்டு வங்கிக் கடன் தொகையை முழுமையாக செலுத்திய பின்னரே முழு உரிமையையும் அரசாங்கம் கொண்டிருக்கும் என்றும் அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை நிராகரித்துள்ள இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், இந்த மருத்துவக் கல்லூரி உடனடியாக அரசுடமையாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது.

சாதகமான பதில் இல்லையேல் அடுத்த சில தினங்களில் மீண்டும் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் அது அறிவித்துள்ளது.

”சைட்டம்” எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரி அரசுடமையாக்கப்பட வேண்டும். அதுவரை மாணவர்கள் அனுமதி மற்றும் பட்டம் வழங்குதல் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தங்களால் முன் வைக்கப்பட்டுள்ள 5 கோரிக்கள் தொடர்பாக அரசாங்கம் சாதகமான பதிலை வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கம் எதிர்பார்க்கின்றது.

அடுத்த சில நாட்களுக்குள் இதற்கான பதில் கிடைக்காத நிலையில் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் துணைச செயலாளர் டாக்டர் நளிந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *