சென்னையில் 71 கோடி ரூபாய் போதைப் பொருளுடன் 10 பேர் கைது

சென்னையின் புறநகர் பகுதியில் 71 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைக் பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக மலேசியக் பிரஜை உட்பட, 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு அருகில் உள்ள செங்குன்றம் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் மெத்தாஃபெடமைன் என்ற போதைப் பொருள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது.

துணிகளைத் துவைப்பதற்கான சலவைத் தூளைத் தயாரிக்கும் தொழிற்சாலையைப் போல அமைக்கப்பட்டிருந்த அந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் ரகசியமாக மெத்தாஃபெடமைன் பொருளைத் தயாரிப்பதற்கான சோதனைச் சாலை செயல்பட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மெத்தாஃபெடமைன் போதைப் பொருள்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionமெத்தாஃபெடமைன் போதைப் பொருள்

அதே நேரத்தில் சென்னையில் சேமிப்புக் கிடங்கு ஒன்றிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் மெத்தாஃபெடமைனும் பெருமளவில் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்து மூலப் பொருட்கள் செங்குன்றத்தில் உள்ள தொழிற்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு மீண்டும் சேமிப்புக் கிடங்கிற்குக் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு மலேசிய பிரஜை உட்பட இந்த போதைப் பொருள் தயாரிப்பில் சம்பந்தப்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையின்போது 11 கிலோ மெத்தாஃபெடமைன், 56 கிலோ ஸூடோபெடரைன், 90 கிலோ ஹெராயின் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *