இலங்கை நிலச்சரிவு: பலி எண்ணிக்கையுடன் தோல் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அச்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வயிற்றோட்டம் , வாந்திபேதி மற்றும் தோல் சார்ந்த நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இதுவரையில் தொற்று நோய்கள் தொடர்பாக அறிக்கையிடப்படவில்லை என்று கூறும் சுகாதார அமைச்சு இது தொடர்பான முன் நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளது.

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அரசாங்கம் கூறுகின்றது.

திங்கட்கிழமை இரவு வரை 180 என அறிக்கையிடப்பட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை 183 ஆக உயர்ந்துள்ள அதே வேளை 103 பேரை தொடர்ந்து காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்ட தகவல் குறிப்பில் சுமார் ஒரு இலட்சத்து 43 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 5 இலட்சத்து 45 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் குடும்பங்களை கொண்ட 80 ஆயிரத்து 500 பேர் 361 பாதுகாப்பான நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வயிற்றோட்டம் , வாந்திபேதி மற்றும் தோல் சார்ந்த நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

 

மாத்தறை மாவட்த்திலே கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் 43 ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 62 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 26 ஆயிரம் குடும்பங்களை கொண்ட 1 இலட்சத்து 05 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 32 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நோய் பரவும் அபாயம்

களுத்துறை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 10 குடும்பங்களை கொண்ட 1 இலட்சத்து 8 ஆயிரம் பேர் என அதிகாரபுர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு , கம்பகா , அம்பாந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் ஒரு தொகை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

உயிரிழப்பு 183 ஆக உயர்வு

மிக மோசமான பாதிப்புக்குள்ளான ஏழு மாவட்டங்களிலும் மரணமடந்தவர்களின் எண்ணிக்கை பிந்திய தகவல்களின் அடிப்படையில் 183 ஆக அதிகரித்துள்ளது. 103 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர். மேலும் 112 பேர் காயமுற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் மரணங்கள் 79 ஆக அதிகரித்துள்ள நிலையில் காணாமல் போனோர் எண்ணிக்கை 28 இலிருந்து 26 ஆக குறைந்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 54 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 57 பேரை தொடர்ந்து காணவில்லை என அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டம் -24 பேர் காலி மாவட்டம் -13 பேர் அம்பாந்தோட்டை மாவட்டம் -05 பேர் . கேகாலை மாவட்டம் -04 பேர் மற்றும் கம்பகா மாவட்;ம் -04 பேர் என்ற எண்ணிக்கையில் 183 மரணங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் 15 பேரும் மற்றும் காலி மாவட்டத்தில் 05 பேரும் என்ற எண்ணிக்கையில் 103 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *