வடகொரியாவில் மலேஷிய கால்பந்து வீரர்களுக்கு விஷம் வைக்கப்படலாம் என அச்சம்: போட்டி இடம் மாற்றப்படுமா?

வட கொரியாவின் பியோங்யாங்கில் ஆசிய கோப்பை தகுதிப் போட்டி நடைபெற்றால், வீரர்களுக்கு நஞ்சுக் கொடுக்கப்படலாம் என்று மலேஷிய கால்பந்துக் குழுவின் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

வீரர்களின் பாதுகாப்புக்காக, நடுநிலையான இடத்திற்கு போட்டி நடைபெறும் இடம் மாற்றியமைக்கப்படவேண்டும் என்று துங்கூ இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் விரும்புகிறார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னின் ஒன்றுவிட்ட சகோதரருக்கு மலோஷியாவில் நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டதை அடுத்து, முதல்முறை இந்தப் போட்டி ஒத்திவைக்கப்பட்ட்து.

ஜூன் எட்டாம் தேதியன்று போட்டி நடைபெறும் என்று ஆசிய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், இந்த முடிவு குறித்து மலேஷிய கால்பந்து சங்கம் செய்துள்ள மேல்முறையீடு குறித்து ஆசிய கால்பந்து நிர்வாகக் குழு பரிசீலனை செய்துவருகிறது.

“தங்குமிடம் மற்றும் உணவு தொடர்பான பாதுகாப்பு உறுதி குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்” என்று மலேஷிய கால்பந்து சங்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் தங்கூ இஸ்மாயில் பதிவிட்டிருக்கிறார். “எனக்குக் கிடைத்தத் தகவல்களின்படி, அங்கு நாசவேலை நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதால் சொந்த உணவை எடுத்துச் செல்லவேண்டும்”.

 

“அடுத்த பெரிய பிரச்சனை நடுவர்கள். வடகொரியாவிற்கு எதிராக போட்டி நடுவர் தீர்ப்பு சொல்லிவிட்டால், போட்டி நடத்தும் அதிகாரிகளின் பாதுகாப்பும் பாதிக்கப்படும். எனவே நடுவர்களுக்கு இந்த அழுத்தம் இருக்கும்”.

2019 ஆசிய கோப்பை தகுதி சுற்றின் முதல் போட்டியில் மலேஷிய அணி விளையாட மறுத்தால், 3-0 என்ற கோல் கணக்கில் மலேஷிய அணி தோல்வியைத் தழுவும்.

கடந்த மாதம், மலேஷியாவிற்கு பயணம் மேற்கொள்ளவேண்டாம் என வடகொரியா தன் நாட்டினருக்கு தடைவிதித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், வடகொரியாவிற்கு பயணம் செய்ய தன் நாட்டு மக்களுக்கு மலேஷியாவும் தடைவிதித்தது.

கோலாலம்பூர் சர்வதேச விமானநிலையத்தில், நரம்புமண்டலத்தை தாக்கும் வேதிப்பொருள் தோய்க்கப்பட்ட துணியை பயன்படுத்தி, வடகொரியத்தலைவரின் சகோதரர் கிம் ஜாங்-நாமை வடகொரியா கொன்றதாக தென்கொரியா குற்றம்சாட்டுகிறது.

இந்தக் கொலை தொடர்பாக சந்தேகப்படுவதாக பல வடகொரியர்களின் பெயர்களை மலேஷிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *