இலங்கையில் கடையடைப்பு: கிழக்கிலும் இயல்பு நிலை பாதிப்பு

இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அனுசரிக்கப்படும் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உண்மை நிலையை வெளிப்படுத்தப்பட வேண்டும். அரச படையினர் நிலை கொண்டுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து காணாமல் போனவர்களின் உறவினரும், காணிகளின் உரிமையாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மூடப்பட்டுள்ள கடைகள், சந்தைகள்

இந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஏற்பாட்டாளர்களினால் கடையடைப்பு மற்றும் ஹர்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் அனுசரிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களில் மாணவர்கள் வராததால் அரச மற்றும் தனியார் பள்ளிக் கூடங்கள் வெறிச்சோடிச் காணப்படுகின்றன. அரச, தனியார் அலுவலகங்களிலும் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மூடப்பட்டுள்ள கடைகள்
Image captionமூடப்பட்டுள்ள கடைகள்

போக்குவரத்து சேவைகளை பொறுத்தவரை ஆட்டோ சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அரச, தனியார் உள்ளுர் பேருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன. தூர இடங்களுக்கு செல்லும் போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

பயணிகள் இன்றி காணப்படும் மட்டக்களப்பு பேருந்து நிலையம்
Image captionபயணிகள் இன்றி காணப்படும் மட்டக்களப்பு பேருந்து நிலையம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை அனுசரிக்கப்படும் ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட தமிழ் – முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *