அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு ஐந்து நாள் போலீஸ் காவல்

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை ஐந்து நாள் போலீஸ் காவல் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பான உத்தரவை சிறப்பு நீதிபதி பூனம் சவுதிரி இன்று (புதன்கிழமை) பிறப்பித்தார்.

டி.டி.வி தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜூனா கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரையும் ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

மே 1 ஆம் தேதிவரை போலீஸ் காவலில் டி.டி.வி தினகரன் வைக்கப்பட உள்ளார்.

இன்று பிற்பகல் தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தப்பட்டபோது, காவல்துறை தரப்பு வழக்கறிஞர் பல்பீர் சிங், தினகரனை ஏழு நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரினார்.

ஆனால், தினகரன் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் பாஹ்வா, அதை ஆட்சேபித்தார். அவர் கைது செய்யப்பட்டதே சட்டவிரோதமானது என்று வாதிட்ட விகாஸ் பாஹ்வா, அவர் முக்கிய குற்றவாளி இல்லை என்றும், ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு ஐந்து நாள் போலீஸ் காவல்
படத்தின் காப்புரிமைTWITTER

அதன்பிறகு, ஐந்து நாள் காவலில் எடுக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் விகாஸ் பாஹ்வா, வேறு நீதிமன்றம் எதிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரா வரும் 28-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

இரட்டை இலைப் பிரச்சனை

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணியினருமே அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரின.

கடந்த 12-ஆம் தேதி நடைபெற இருந்த இடைத் தேர்தல், பெருமளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில், கடந்த வாரம் சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் ஒருவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தருவதாகவும், அதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தினகரனிடம் பல கோடி ரூபாய் அவர் பெற்றிருப்பதாக தகவல் வெளியானது. அவரிடமிருந்து ரூ.1.3 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்தனர். அதன்பேரில், தினகரன் டெல்லி வந்து விசாரணையை சந்தித்து வந்தார்.

சுகேஷ் சந்திரா, அவரது உதவியாளர் ஜனார்த்தனா, நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தினகரன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *