புதிய வரவை எதிர்நோக்கும் செரீனா வில்லியம்ஸ்

மகளிர் டென்னிஸ் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக உள்ளதாகவும், வரும் மழைக்காலத்தில் அவரது பிரசவம் நடக்கக்கூடும் என்று அவரது மக்கள் தொடர்பு பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார்.

35 வயதாகும் செரீனா, கண்ணாடி முன் நிற்கும் தனது புகைப்படத்தை ”20 வாரங்களாகி விட்டது” என்ற வாசகத்துடன் ஸ்னாப்ச்சாட் செயலியில் தகவல் வெளியிட்டிருந்தார். பின்னர், இப்பதிவை அவர் அகற்றி விட்டார்.

கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதன் மூலம், தனது 23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த செரீனா, வரவிருக்கும் டென்னிஸ் தொடர்களில் இருந்து விலக உள்ளார்.

23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த செரீனா
படத்தின் காப்புரிமைAFP
Image caption23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த செரீனா

எதிர்வரும் ஃபிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் தொடர்களும் செரீனா விளையாடாமல் போகும் தொடர்களில் உள்ளடங்கும்.

உலகின் மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை அடுத்த வாரம் பெறவுள்ள செரீனா, தரவரிசை தொடர்பாக மகளிர் டென்னிஸ் குழுமத்தின் சிறப்பு விதியின்படி, குழந்தை பிறந்த 12 மாதங்களுக்குள் தனது முதல் தொடரை விளையாட தயாரானால் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்வார்.

செரீனா கர்ப்பமாக இருப்பதாக வந்த செய்தி குறித்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் அமைப்பு கருத்து வெளியிடுகையில், ‘அவருக்கே சொந்தமாக போகும் ஒரு பெருமை மற்றும் மகிழ்ச்சி விரைவில் செரீனாவுக்கு கிடைக்கப் போகிறது. குழந்தை பிறக்கப் போகிறது என்ற இந்த உற்சாகமான அறிவிப்புக்கு வாழ்த்துக்கள்!’ என்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது.

கவிதை வடிவில் திருமண நிச்சயத்தை அறிவித்த செரீனா வில்லியம்ஸ்

முன்னதாக , கடந்த ஆண்டின் இறுதியில் பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் தனது திருமணம் நிச்சயமாகி விட்டதாக , ரெடிட் இணையதள பக்கத்திலேயே உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை செரீனா ஒரு கவிதை வடிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒஹானியனும் தானும் முதலில் சந்தித்து கொண்ட ரோம் நகருக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னிடம் அவர் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாகவும், தான் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் செரீனா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *