வடகொரியாவுக்கு பதிலடி கொடுப்பது எப்படி? அமெரிக்கா – சீனா தீவிர ஆலோசனை

வடகொரியாவின் அணு மற்றும் ஏவுகணை திட்டம் பதற்றத்தை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது பற்றி பல தரப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுப்போன்ற சூழல் தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்பதில் பலருக்கும் ஒருமித்த கருத்து இருப்பதாக ஏ பி சி செய்தி நிறுவனத்திடம் ராணுவ தளபதி எச் ஆர் மெக்மாஸ்டர் கூறினார்.

வட கொரியா தோல்வியில் முடிந்த ஏவுகணை சோதனை மற்றும் ஒரு பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு ஆகியவற்றை நடத்தியதைத் தொடர்ந்து தலைமை பாதுகாப்பு ஆலோசகரின் கருத்து வெளிவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சீனா அமெரிக்கவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்காவுடன் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது தொடர்பாக, வடகொரியாவின் முக்கிய கூட்டாளியான சீனா, இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆப்கன் தலைநகர் காபூல் சென்றுள்ள ஜெனரல் மெக்மாஸ்டர், அமெரிக்க மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

“அணு ஆயுதங்களுடன் இருக்கும் அண்டை நாட்டிடம் இருந்து அமெரிக்கா, அதன் கூட்டாளிகள் மற்றும் பங்குதாரர் நாடுகளுக்கு அந்தப் பிராந்தியத்தில் எந்த அச்சுறுத்தலும் ஏற்படுவதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என்று அதிபர் ஏற்கெனவே தெளிவுபடக்கூறியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *