ஜனாதிபதி விருது வழங்கி கெளரவிப்பு

2016 ஆம் ஆண்டில் க.பொ.த. (உ/த) பரீட்சை மற்றும் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான சித்திகளை பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவித்து பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

 

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. (உ/த) பரீட்சையின் 07 பாடப் பிரிவுகளிலும் முதல் 05 நிலைகளைப் பெற்றுக்கொண்ட 35 மாணவ மாணவியரும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் அதிக புள்ளிகளைப் பெற்ற 12 மாணவ மாணவியரும் இதன்போது பாராட்டு பெற்றனர்.

மாணவர்களின் திறமையை மெச்சிய ஜனாதிபதி அவர்கள் அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம், மக்கள் வங்கி மற்றும் இலங்கை சிங்கர் நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் அவர்களுக்கு பணப் பரிசில்களும், மடிக் கணனிகளும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட கல்வியமைச்சின் உயர் அதிகாரிகளும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *