நல்லாசிரியர்களே! உங்களனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

மிக உன்னதமான பணியை உன்னதமாகச் செய்யும் நீங்கள் மனித குலத்தின் அருஞ் செல்வங்கள். வையகத்தைக் கட்டியாளும் பெரும்பாலானவர்களில் உங்கள் சேவையின் தாக்கமிருக்கிறது.

தாம் யார் என்பதைத் தெரிந்து கொள்ளாத பலருக்கு அவர்களை அடையாளம் காட்டிக் கொடுத்ததே நீங்கள் தாம். உங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து எத்தனையோ பேரைக் கற்க வைத்திருப்பீர்கள். அரவணைக்க யாருமில்லாத எத்னையோ குழந்தைகளுக்கு பெற்றோரின் இடத்தில் நின்று பணி புரிந்திருப்பீர்கள். காயப்பட்ட உள்ளங்களுக்கு மருந்தாக மாறியிருப்பீர்கள்.

உங்கள் பொன்னான பொழுதுகள் எல்லாம் மாணவச் செல்வங்களின் முன்னேற்றம் பற்றிச் சிந்திப்பதில் கழிந்திருக்கும். குறைந்த புள்ளிகள் வாங்கும் பிள்ளகளின் நிலையை விருத்தி செய்ய இலவசமாக மேலதிக வகுப்புகள் செய்வதற்காக எத்தனையோ சௌகரியங்களை இழந்திருப்பீர்கள்.
பிள்ளைகளுக்குத் தரமாகக் கற்பிக்க வேண்டும் என்பதற்காக நாளுக்கு நாள் உங்கள் அறிவை விருத்தி செய்து அதன் பலனை பிள்ளைகளுக்கு வழங்கியிருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களை மிகச்சரியாக வளர்த்து விட வேண்டும் என்ற பேரவா எப்படியெல்லாம் உங்களை உந்தித் தள்ளியது!
ஏணியென மாணவரை ஏற்றி விட்டுத் தாம் கீழே
இருப்பாரே இதுவன்றோ புதுமை! – அந்த
மேனிநலம் பாராத மேதையரைப் பாடாமல்
மேதினியில் இருக்கிறதா கவிதை?
என கவிஞர் வைரமுத்து அவர்கள் உங்களைப் போன்ற உத்தமர்களைப் பார்த்துத்தானே பாடுகிறார்.

உங்கள் சேவைகள், தியாகங்கள், முயற்சிகள் எதுவும் வீணாகி விடவில்லை. அவை உங்கள் மாணவ மணிகளின் மனதில் என்றும் பசுமையாய்ப் பதிந்திருக்கும். அவர்கள் சிகரத்தில் ஏறியிருந்தால் அதற்கான பாதையை வெட்டித் தந்தவர்கள் நீங்கள் என்பதை ஒரு போதும் அவர்கள் மறக்கப் போவதில்லை. உங்களுக்கான அவர்களது பிரார்த்தனைகள் ஒரு போதும் ஓயப் போவதுமில்லை.
உங்கள் அர்ப்பணிப்புகளுக்கான வெகுமதி இறைவனிடமும் குறைவில்லாமல் இருக்கும்.

ஆனால், உங்களைப் போன்று இதே தொழிலைச் செய்து ஒரே சம்பளம் வாங்கும் பலர் ஏன் விளங்கிக் கொள்ள முடியாத விசித்திரங்களாக இருக்கிறார்கள்?

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றப் போவதாகத் தான் முன்னைய ஆட்சியாளர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். இவர்களோ உலகப் பேராச்சரியங்களாகவே சில வேளைகளில் மாறிவிடுகிறார்கள். அந்தப் பேராச்சரியங்களைப் பற்றி எழுதச் சொன்னால், நிகழ்கால, இறந்தகால மாணவர்களிலிருந்து ஆயிரக்கணக்கான நூலாசிரியர்கள் உருவாகி விடுவார்கள்.

உங்களைப் போன்ற நல்லாசிரியர்களால் வாழ்வில் மேலே வந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் என்றால், இந்தப் பேராச்சரியங்களால் கல்வியில் முடக்கப்பட்ட, கரைசேரத் தவறிய மாணவர்கள் மில்லியன் கணக்கில் இருக்கிறார்கள். சந்தேகமாயிருந்தால் கணக்கெடுப்பு நடத்திப் பாருங்கள். பட்டியல் நைல் நதியாய் நீளும்.
இந்த விசித்திரங்களால் அரங்கேற்றப்படும் அன்றாடக் காட்சிகளின் சாட்சிகளாய் நீங்களே இருக்கையில் உங்களுக்கென்ன சந்தேகம்?

வருட இறுதிப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு புள்ளிகள் வந்து சேர்கின்றன. வகுப்பில் 30 பிள்ளைகள். 35 பிள்ளைகளுக்கான புள்ளிகள். மேலதிகமாக ஐந்து….?

புதிருக்கான விடை கிடைத்தது. பெயர் இடாப்பில் அவர்களது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் பல மாதங்களாக அவர்கள் பாடசாலைப் பக்கமே வந்ததில்லை. வீட்டிலிருந்தபடி பரீட்சை எழுதாமலே ஆசிரியரிடம் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள என்ன பாக்கியம் செய்தார்களோ!

கணித,விஞ்ஞான,வரலாற்று விடைத்தாள்களைத் திருத்தி விடலாம். ஆனால் மொழி;ப் பாட விடைத்தாள்களைத் திருத்துவதென்பது ஆசிரியர்களுக்குரிய சோதனை. அநியாயமாய் ஒரு புள்ளி கூடக் குறைந்து விடவும் கூடாது. மேலதிகமாக ஒரு புள்ளியைக் கூட்டிக் கொடுப்பதன் மூலம் மற்ற மாணவர்கள் பாதிக்கப்படவும் கூடாது. அவ்வளவு சிரமான வேலை அது.

30க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் வழங்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தில் புள்ளிகள் வந்து சேர்கின்றன. கடுகதி வேகத்தில் விடைத்தாள் திருத்தும் நுணுக்கம் நமக்கு மட்டும் தெரியாமல் போனதேன்?
மணியடித்து வகுப்புக்குப் போகமுன் சிறிது நேரம் வெளியே… மேசையில் தலை வைத்து குறட்டை விட்டுத் தூங்கும் டீச்சரை மாணவியர் பக்குவமாய் எழுப்ப, திடுக்கிட்டு விழிக்கும் அவர் வாயைத் துடைத்துக் கொண்டு வெளியேறும் வரையான காத்திருப்பு அது.

ஒரு வகுப்பில் பாடம் நடத்தும் போது சில வேளைகளில் அடுத்த வகுப்பு மாணவத் தலைவியின் குரல் கேட்கும்’ ஷ்.. சத்தம் போட வேணாம்! டீச்சர் தூக்கம்’ டீச்சர் விழித்திருந்து நடத்தும் பாடத்தை விட அவர் தூங்கி எழும்புவதே பரவாயில்லை என மாணவியர் நினைத்தார்களோ என்னவோ!

‘புள்ளைகள் என்ன பாடம்?’ ஒரு வகுப்புக்கு எத்தனையோ பாடம் எடுக்கும் டீச்சர் கேட்கிறார். ‘சிங்களம்’ பிள்ளகளின் பதில்.
‘சிங்களத்தில என்னத்தப் படிச்சவன்? எல்லாம் மேசைல தலய வச்சிப் படு!’ டீச்சர் சொன்னபடி மாணவியர் செய்ய, டீச்சர் வெளிநாட்டிலிருக்கும் கணவருக்கு கடிதம் எழுத ஆரம்பிக்கிறார்.
இவையெல்லாம் ஐந்து வருட ஆசிரிய அனுபவத்தில் என் விழிகளும் செவிகளும் சாட்சி சொல்லும் சில காட்சிகள்.
நீங்கள் இருபது வருடச் சேவையென்றால்…?
ஷாறா
(தொடரும்….)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *