பல்கலைக்கழகம் பயணிக்கத் தயாராகும் பெண் சகோதரிகளுக்கானது

13வருடங்கள் கற்றுத் தேர்ந்த பாடசாலையில் ஆரம்பத்தில் இருந்தே எத்தனையோ நட்புக்களை சுமந்து சுற்றித்திரிந்திருந்தாலும், அவர்கள் எல்லோரும் படித்து பல்கலைக்கழகம் சென்றதாய் சரித்திரம் கிடையாது. அந்த நட்புப் பட்டியலில் சொற்ப தொகையினரே பல்கலைகழகம் தெரிவாகி பட்டதாரிகளாக சமூகத்தில் கால் பதிக்கின்றார்கள்.

பல்கலைகழகம் என்பது பல்கலையும் பயிலும் ஒரு மிகப்பெரும் கூடம் என்ற மமதையில் நம்மில் சிலர் அங்கு சென்றதும் தன் வாழ்க்கைப் போக்கையே மாற்றிக்கொள்கின்றனர். கூண்டில் அடைபட்ட பறவைக்கு விடுதலைக் கிடைத்தால் என்ன செய்வதென்றே தெரியாமல் தன்விருப்பப் படி தான் இயங்கும் நிலை நம்மில் சில பெண்களுக்கு, வீட்டில் இருந்த பறவைக்கு விடுதலையா இந்த பல்கலைக்கழகம் என்ற வினாவையும் கூட எழுப்பிப் பார்க்கலாம்..

படிப்பை விட பண்பாடு முக்கியம் என்ற விதி மாறி,
அற்ப ஆசைகளும்…
நடை, உடை மாற்றங்களும்..
ஆண் பெண் கலப்புக்களும்…
நவீன ஜாஹிலிய்யத்தாய் நடைபோட, இஸ்லாத்தின் வரையறைகள் தவிடு பொடியாகிப் போயுள்ளமை வருந்தத் தக்கதே….

தன் பிள்ளைகள் எல்லாம் கற்று, ஒழுக்க மேதைகளாய் சமூகத்தில் நன்நிலையில் மிளிர வேண்டும் என்ற ஆசையில் வரும் செலவுகளைக் கூட பொருட்படுத்தாமல், பல்கலைக்கழகம் வழியனுப்பும் பெற்றோரின் கனவுகள் செல்லாக்காசாய் சிதைந்திடுமாயின் பாவமில்லையா அவர்கள்???
சிலர் பல்கலைக்கழகம் சென்றதும் “தன் வாழ்க்கைத் தகுதிக்குப் பொருத்தமானவரையே திருமணம் முடிக்க வேண்டும்” என்ற சித்தாந்தத்தை சூடிக் கொண்டு, அங்கேயே வாழ்க்கைத் துணைகளை அமைத்து உல்லாசமாய் சுற்றித்திரியும் அவல நிலையும் காணப்படுகின்றன.
பல்கலைகழகம் சென்ற நம் இஸ்லாமிய பெண்மணிகளில் மற்றும் சிலர் தான் விரும்பிய ஒருவருக்காய் மார்க்கத்தைக் கூட விட்டுக்கொடுக்கும் நிலமையும் இருக்கத் தான் செய்கின்றன.

அல்லாஹ்வுக்காக அவன் விதித்த வரையறைக்குள், “இறைவா! நான் கல்விகற்கப் போகின்றேன். என் ஒவ்வொரு அடிகளையும் இபாதாவாக அமைத்து, அறிவு ஞானத்தை அதிகப்படுத்தி, ஷைத்தானின் தீங்கில் இருந்து எங்களைப் பாதுகாத்து, சமூகம் வேண்டும் நற் பிள்ளைகளாய் எம்மை ஆக்கிவை” என்ற பிராத்தனையோடு அவன் கூறிய பிரகாரம் எங்கள் அடுத்தடுத்த கட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இறைவன் தந்த மிகப்பெரும் அருள் கல்விஞானம்.. அதை இறுதிவரை அருளாகவே அமைத்துக் கொள்ள வேண்டும். “சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வியைக் கற்றுக் கொள்” என்ற மகுடத்தை மனதில் பதிய வைத்து முறைப்படி படித்தாக வேண்டும்.

பல்கலைகழகம் நுழைந்த பெண்களும், நுழையும் பெண்களும், மேற்குறிப்பிட்ட விடயங்களை அவசியம் சிந்திக்க வேண்டும். “பல்கலைக்கழகம் பெண்களுக்கு சாபம்” என்ற நிலை தற்காலத்தில் வேரூன்றி வளர “நாங்களும் பல்கலைகழகம் சென்று, படித்து வெளியாகிய பட்டதாரிகள் தான், ஒவ்வொருவரதும் எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமையும், ஒரு சிலரின் தவறுகளுக்கு எல்லோரும் பலியாக முடியாது” என்பதை இந்த சமூகத்துக்கு தெரியப் படுத்த வேண்டிய கடப்பாடு எழுந்துள்ளது.
ஆக பல்கலைக்கழகம் சென்று…
நல்ல நட்புக்களை அமைத்து…
வந்த நோக்கத்தை அடைந்து…
இறைவன் பொருத்தம் பெற்று… ஈன்றோரின் மகிழ்ச்சிக்கு காத்திரமாகி…
பல்கலையும் நற்கலையாய்க் கற்று..
சமூகம் வேண்டும் பட்டதாரிகளாய், நாளைய உலகுக்கு முன்மாதிரியானோராய்…
மிளிர்ந்து மணம் வீசுவோம் இன்ஷா அல்லாஹ்..
எல்லாம் வல்ல அல்லாஹ் இறுதிவரைக்கும் எங்கள் சிந்தையை சீர் படுத்தி, எண்ணங்களுக்கு சிறந்த நற்கூலியை தந்தருள் புரிவானாக!!

By Aathifa Ashraf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *