பொதுப் போக்குவரத்தின் எதிர்காலம்: டிரைவர் இல்லாத பஸ்!

டிரைவர் இல்லாத கார் உபயோகம் பரவலாக சில நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல் படுத்தப்படுகிறது. பல்கலைக்கழக வளாகங்கள், சுற்றுலா மையங்கள் உள்ளிட்டவற்றில் இதுபோன்ற வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் பேட்டரியால் இயக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பில்லை.

தற்போது பொது போக்குவரத்துக்கென 12 பேர் பயணிக்கக்கூடிய மினி பஸ் பின்லாந்தில் சோதனை ரீதியில் இயக்கப்படுகிறது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகர தெருக்களிலும் இத்தகைய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதியில் லாஸ் வேகாஸ் மற்றும் மியாமி உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்பட உள்ளது. ஓலீ (Olli) என்ற பெயரிலான இந்த பஸ் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் செல்கிறது.

இந்த மினி பஸ் டிரைவர் இல்லாமல் இயங்குவதற்கான தொழில்நுட்ப உத வியை ஐபிஎம் நிறுவனம் அளித்துள்ளது. வாட்சன் காக்னிடிவ் கம்ப்யூடிங் சிஸ்டம் என்ற பெயரில் இது செயல்படுகிறது. இது ஐபிஎம் சூப்பர் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதில் 30 உணர் கருவிகள் (சென்சார்), காமிரா, ஜிபிஎஸ், லிடார் எனப்படும் ஒளி பட உணர் கருவி உள்ளிட்டவை உள்ளன.

எதிர்காலத்தில் பொது போக்குவரத்தில் இத்தகைய மினி பஸ்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

மொபைல் போன் உதவியோடு இந்த பஸ்ஸில் நீங்கள் ஏறி, இறங்க முடியும். வழக்கமான பஸ் போலல்லாது உங்கள் வீட்டிலிருந்து அலுவலகத்துக்குச் செல்வதற்கு இதைப் பயன்படுத்தலாம்.

இந்த பஸ்ஸில் ஏறியவுடன் பயணிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சிறந்த உணவகம் எங்கே உள்ளது? இப்பகுதியில் உள்ள முக்கியமாக பார்க்க வேண்டிய புராதன இடம் எது? என்பன போன்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

மேலும் ஓலீ வாகனம் மற்றெந்த வாகனத்தை விடவும் மாறுபட்டது. பேட்டரியில் இயங்குவதோடு இது தானாக செயல்படக் கூடியது. செயலி மூலம் இது செயல்படக் கூடியது. இதற்கான தொழில்நுட்பத்தை ஐபிஎம் நிறுவனத்தின் வாட்சன் அளித்துள்ளது. ஓலீ மினி பஸ் செயல்பாட்டுக்கு வருவதற்கு 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பின்புலமாக இருந்துள்ளன.

இந்த மினி பஸ்ஸை வடிவமைத்தவர் எட்கர் சார்மைன்டோ என்ற 22 வயது இளைஞர். 2014-ம் ஆண்டு கொலம்பியா பல்கலையில் தொழில்துறை வடிவமைப்பு பயிலும்போது பொகடா வடிவமைப்பு நிறுவனத்துக்காக இந்த முப்பரிமாண (3-டி) பிரின்டர் மினி பஸ்ஸை உருவாக்கினார். இந்த பஸ் வடிவமைப்பு மிகச் சிறந்த வடிவமைப்புக்கான விருதை பெர்லினில் பெற்றுள்ளது. இந்த பஸ் பிளாஸ்டிக் மற்றும் பிற கூட்டுக் கலவையால் உருவாக்கப்பட்டது.

இந்த வடிவமைப்பை அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த லோக்கல் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்று 3-டி பிரின்டர் காரை உருவாக்கியது. இந்தக் கார் மாடலில் வியந்து போன லோக்கல் மோட்டார்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜான் பி ரோஜெர்ஸ் ஜூனியர், இதை உருவாக்குவதாக உத்தரவாதம் அளித்தார். அதன் அடிப்படையில் உருவானதே ஓலீ.

இதேபோன்று 10 லட்சம் வாகனங்களை உருவாக்குவதே இவரது நோக்கமாம்.

இந்த நிறுவனம் உருவாக்கிய பெரும்பாலான வாகனங்கள் இந்நிறுவன பணியாளர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. புதிய வடிவமைப்பாளர்கள் உருவாக்கும் மாடலை கொண்டு தயாரிப்பதே இந்நிறுவனத்தின் உத்தி என்கிறார் இந்நிறுவனத்தின் உத்திகள் வகுக்கும் பிரிவுக்கு தலைவரான ஜஸ்டின் பிஷ்கின்.

இவ்விதம் வடிவமைக்கப்பட்ட டிசைன்கள் வர்த்தக ரீதியில் வெற்றி பெறும்போது ஒவ்வொரு வாகன மதிப்பிலும் ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரை உருவாக்கியவருக்கு ராயல்டியாக இந்நிறுவனம் அளிக்கிறது.

இதுவரையில் இந்நிறுவனம் 12-க்கும் மேலான வாகன டிசைன்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் சிலமட்டுமே வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றுள்ளன.

இதற்கு முன் பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர சைக்கிளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி 1,500 டாலர் என விலை நிர்ணயித்தது. இவை 1,500 மட்டுமே விற்பனையானது. இதே போல ஒரு லட்சம் டாலர் விலையில் அறிமுகமான ராலி பைட்டர் என்ற வாகனம் 100 மட்டுமே விற்பனையானது. இதனால் இவை இரண்டின் உற்பத்தியையும் இந்நிறுவனம் நிறுத்திவிட்டது.

லோக்கல் மோட்டார்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் மக்களுக்கு பயன்படும் வாகனங்களைத் தயாரித்து அளிப்பதுதான் பிரதான நோக்கம். போர்ஷே நிறுவனத்தைப் போல ரகசியமான பரிசோனை தளம் கிடையாது. கூகுள் நிறுவனம் அறிவித்ததைப்போல டிரைவர் இல்லாத கார், ஆனால் இதுவரையில் சாலையில் ஓடவில்லை. ஆப்பிள் நிறுவனம் போல தொழில்நுட்ப பின்புலமும் கிடையாது. இந்த சமுதாயத்திலிருந்து பெற்றதை மக்களுக்குக் கொடுப்பதே நோக்கம். அந்த வகையில் மாணவர் வடிவமைத்த டிசைன் இந்த மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக இதை உருவாக்கியதாக ரோஜெர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒன்றும் டெஸ்லா காரைப் போன்ற அதிக விலை கொண்டதும் அல்ல. பொது போக்குவரத்துக்கு கட்டுபடியாகும் விலையில் சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதே நோக்கம். அதை ஓலி நிறைவேற்றும் என நம்புவதாக ரோஜெர்ஸ் குறிப்பிட்டார்.

100 வாகனங்களுக்கான ஆர்டர் கிடைத்தது. இதில் வடிவமைத்த சார்மைன்டோவுக்கு 28 ஆயிரம் டாலர் தொகை ராயல்டியாக கிடைத்துள்ளது. இத்தாலி நகரில் பொது போக்குவரத்து வாகன வடிவமைப்புப் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். அதற்கான ஆர்டர் கிடைக்கும்போது இவருக்கான ராயல்டி தொகை அதிகரிக்கும்.

இந்த மினி பஸ் மீதான ஆர்வம் பல தரப்பிலும் அதிகரித்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் ஆலை வளாகங்களில் இத்தகைய மினி பஸ்ஸை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டில் 100 பஸ்ஸை தயாரித்து அளிக்கமுடியும் என லோக்கல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு எப் போதும், எங்கும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் பொது போக்கு வரத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் ஓலீ-க்கு அனைத்து நாடு களிலும் சிவப்புக் கம்பள வரவேற் பிருக்கும் என்பது நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *