மாணவி கொலை வழக்கின் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவின் விசாரணைகள் பூர்த்தி

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவின் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டு உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்து உள்ளார்.

மாணவி கொலை வழக்கில் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள ஒன்பது சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை தாண்டி உள்ளமையால் மேலும் மூன்று மாத காலத்திற்கு விளக்கமறியலை நீடிக்க வேண்டும் என கோரி யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று  வழக்கு நடைபெற்றது.

யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது , மன்றில் ஒன்பது சந்தேக நபர்களும் ஆஜர் ஆக்கப்பட்டனர்.

சந்தேக நபர்களில் 4ம் , 7ம் , 9ம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி சரத் வெல்கம வும் , மாணவியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் , முன்னிலையாகி இருந்தனர்.

அதனை தொடர்ந்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபர்களின் விளக்கமறியல் திகதியை நீடிக்குமாறு கோரி சமர்ப்பணம் செய்தார்.

அதில் மாணவி கொலை வழக்கு தொடர்பான குற்ற புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் பூர்த்தியாக்கப்பட்டு , விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டு உள்ளது. அதன் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தால் வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் சாட்சியங்களை அச்சுறுத்துவது , வழக்கில் தலையீடுகள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதனால் பிணையில் விடுவிக்க கூடாது என கோரிக்கையை முன் வைத்தார்.

அதனை தொடர்ந்து சந்தேக நபரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி , சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் சமர்பனத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து , பிணையில் விடுவிக்க கோரினார்.

தனது கட்சிகாரர்களான , 4ம் , 7ம், மற்றும் 9ம் சந்தேகநபர்கள் சம்பவ தினத்தின் போது கொழும்பில் இருந்ததாகவும் , அதற்கான ஆதாரங்களாக ஊஊவுஏ கமரா காட்சி , மற்றும் சுயாதீன சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் செய்யாத குற்றத்திற்காக 15 மாதங்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளமையால் அவர்கள் குற்றவாளிகள் எனும் மனப்பாங்கு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் அவர்கள் உளவியல் ரீதியா பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன் 4ம் சந்தேக நபர் நோய்வாய்பட்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருடைய தாயாரும் மாணவியின் தாயாரை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது விளக்கமறியலில் உயிரிழந்தார். இதனால் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளார்.

அதேபோன்று 7ம் சந்தேக நபர் 24 வயதுடைய இளைஞர் அவருக்கு திருமணம் ஆகவில்லை அவரது வயதான தாயாரை அவரே கவனிக்க வேண்டுமம் எனவே அவரின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் 9ம் சந்தேக நபரின் மனைவி பிள்ளைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இவர்கள் மூவரையும் பிணையில் விடுவிக்க வேண்டும். என கோரினார்.

அதனை தொடர்ந்து நீதிபதி கட்டளை பிறப்பிக்கையில் ,

சந்தேக நபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் பிணை விண்ணப்பத்தினை நிராகரிப்பதாக தெரிவித்தார். அத்துடன் சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதித்தால் , சாட்சியங்களை அச்சுறுத்தப்படலாம் , வழக்கில் தலையீடுகள் காணப்படும். சாட்சியங்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக இருந்தாலே சுதந்திரமாக சாட்சியம் அளிக்க முடியும்.

எனவே சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீடிப்பதற்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றுக்கு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி மீண்டும் மேல் நீதிமன்றில் சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு மேல் நீதிபதி உத்தரவு இட்டார்.

அதனை தொடர்ந்து சந்தேக நபர்களுக்கு நீதிபதி கூறுகையில் கடந்த தவணையின் போது , அமைதியாக இருக்குமாறு கூறினேன். அதனை தொடர்ந்து நீங்கள் அமைதியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இவ்வாறு வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை அமைதியாக இருங்கள்.

என் கையில் ஒன்றும் இல்லை எல்லாமே சட்டமா அதிபர் திணைக்களத்திடமே உள்ளது. எல்லா முடிவும் சட்டமா அதிபரே எடுப்பார். என நீதிபதி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *