சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும்..

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும்..

அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் சீர்த்திருத்தம் சிறுபான்மை சமூகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமையப்பெற வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படுகின்ற போது சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கும் வகையில் பிரிக்கப்பட வேண்டும். விடேசமாக வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களது நாடாளுமன்ற பிரதிநித்துவம் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- 
 
நல்லாட்சி அரசாங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 
 
அந்தவகையில் நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசியலமைப்பு செயற்குழுவும் இயங்கி வருகின்றன.ஆனால், இந்நாட்டில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் - இனங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசமைப்பாகவே அது அமைய வேண்டும். 
இந்த சட்ட மூலங்கள் இனங்களுக்கு - சமூகங்களுக்கு - மதங்களுக்கு இடையில் மீண்டும் மோதல்களை ஏற்படுத்தக் கூடியதாக எந்தவகையிலும் அமைந்துவிடக்கூடாது. 
 
ஒரு சமூகம் அனுபவித்துக் கொண்டுள்ள சலுகைகள் - உரிமைகள்- வசதிகளை இல்லாமல் செய்கின்ற ஒரு அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.  
தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறை மூலம் முஸ்லிம்கள் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். புதிய தேர்தல் சட்ட திருத்தத்தின் போது முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். 
நாடுமுழுவதும் எல்லா பாகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் நடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கும் - உறுதிசெய்யும் சட்ட மூலத்தையே அரசு உருவாக்க வேண்டும். இவ்வாறான பிரேரனைகள் மூலமாகவே இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். 
அவ்வாறே மலையக மக்களது பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். மலையக மக்களது விகிதாசாரத்துக்கு ஏற்ப அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பு இன்று இல்லை. ஆகவே சகல சமூகங்களுடைய நாடாளுமன்ற பிரதிநித்துவத்தையும்- உரிமைகளையும் பாதுகாக்கின்ற அரசமைப்பாக புதிய அரசமைப்பு திருத்தம் உருவாக்கப்பட வேண்டும். 
முஸ்லிம்களது அரசியல் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோமே அவ்வாறே வடகிழக்கிலும் அதற்கு வெளியில் வாழ்கின்ற தமிழ் மக்களது உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். 
சிறுபான்மை மக்களது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் இன – மத வேறுபாடுகளை மறந்து ஒண்றினைய வேண்டும். குறிப்பாக தேசிய ரீதியில் புத்தளம், கண்டி, அக்குறனை, கம்பளை, மாவனல்லை, அநுராதபுரம், குருநாகல், கிழக்கு மாகாணம், வடக்கிலே மன்னார் உட்பட முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களை மையப்படுத்தி முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும். அதேபோன்று வடகிழக்கு மற்றும் மலைய மக்களது பிரதிநிதித்துவம் பாதுகாக்கும் வகையில் விசேட தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *