இன்று கணவன், மனைவி உறவுக்கிடையில் மிகப்பெரும் விரிசல், மனைவியோடு பேசுவதற்குக் கூட நேரமில்லை

காலை முஸ்லிம் நிகழ்ச்சியில் கணவன், மனைவி உறவு பற்றி மிக வேண்டப்படும் சொற்பொழிவொன்று ஓங்கி ஒலிக்க, மாறிப்போன உலகம் எண்ணி வெறுப்பும், ஏன் இந்த வாழ்வென்ற சலிப்பும் தானாய் என்னுள் குடிபெயர்ந்து கொண்டது.

உண்மையில் இன்று கணவன், மனைவி உறவுக்கிடையில் மிகப்பெரும் விரிசல், மனைவியோடு நான்கு வார்த்தை பேசுவதற்குக் கூட கணவன்மார்களுக்கு நேரமில்லை. தொழிலும், பணமும், தகுதியும், தரமும் தான் இந்த உலகில் தலைவிரித்தாட அன்பு என்ற சொல்லே காலாவதியாகிப் போயிட்டு.

காலையில் எழும்பி தொழிலுக்கு செல்லும் கணவன் இரவில் வீட்டுக்கு வந்தாலும் காரியாலய வேலைகள் தான். அதற்கிடையில் மனைவி பற்றி சிந்திக்க எள்ளளவும் நேரம் அவனுக்கு இடம் கொடுக்காது.

“ஒருநாளைக்கு 300தடவைகள் கணவனை மனைவி அழைத்தால் அதில் 30தடவைகளாவது இன்றைய கணவன்மார்களுக்கு பதில் கொடுக்க நேரமில்லையாம்” என்கிறது ஆய்வு
இதனால் பல்வேறு மனஅழுத்தங்களுக்கு ஆளாகும் மனைவியரின் மனதை குணப்படுத்தும் மருந்தான அன்பினை வைத்தியரின் மருந்துகளால் குணப்படுத்த விளைகின்றனர் இந்த கணவன்மார்கள்.

வெளிநாட்டு வாழ்க்கை இதில் முக்கியமானது. திருமணம் முடித்து சில நாழிகையில் மனைவியை தன்னந்தனி தவிக்க விட்டு பணம் தேடிப் பறக்கும் கணவன்மார்களின் கைநிறைப்பணம் அவள் எதிர்பார்க்கும் அந்த அன்புக்கு ஈடாகுமா என்ன?

முழுஉலகுக்கும் வழிகாட்ட வேண்டிய மாபெரும் பொறுப்பை தலை சுமந்த நம் நபி தனது தூதுத்துவத்தில் சொல்லெனாப் பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில் வீடு வந்ததும் எல்லாம் மறந்து மனைவியரின் மடிக்குழந்தையாக, உற்றநண்பனாக, விளையாடும் தம்பியாக, அன்புத் தந்தையாக இருந்து காட்டினாரே? பெரும் யுத்தத்திற்கு தயாராகிக் கொண்டும் ஆயிஷா நாயகியோடு ஓட்டப் பந்தயம் செய்த எம் நபி ஒருகுவளையில் ஒன்றாக சேர்ந்து உண்டு, மனைவியர் கடித்து சாப்பிட்ட பேரீச்சம் பழத்தை எம் அன்னைமார் வாய்பட்ட இடத்தாலே பூசித்து மிக அழகாக வாழ்ந்து காட்டினாரே? அந்த அன்னவரையும் மீறிப் போயிட்டோ நம்மவரின் பொறுப்புக்கள்?

இன்று தலாக் என்ற பெயரில் காழிமன்றம் நிரப்பும் நிறையவரின் பிரச்சனை புரிந்துணர்வு இல்லை என்பதே.. இதை விடுத்து அவளை புரிந்துகொள்ள நேரமில்லை என்று சொன்னால் பிழையாகதல்லவா?

கணவன், மனைவி உறவு காற்றோடு பறக்கும் இன்றைய நிலையில் ஒவ்வொரு கணவன்மாரும் தனது அன்றாட நேரசூசியில் மனைவிக்கென்று நேரம் கொடுத்து, அவள் கருத்துகளுக்கு மதிப்பளித்து, அவள் விருப்புக்களுக்கு செவிசாய்த்து அவள் மனம்குளிர நடந்து கொண்டால் உங்கள் பணத்தால் சீர்செய்ய முடியா அவள் உள்ளம் தானாக சீர்பெற்று விடும். அதன்பின் இந்த உலகில் மிகச் சிறந்த உறவாக கணவன் மனைவி எனும் அதிசய உறவு மிளிர்ந்து பணத்தின் ஆட்சி மாறி அன்பெனும் அரசனின் நல் ஆட்சி வலுப்பெறும் இன்ஷா அல்லாஹ்.

Aathifa Ashraf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *