சாம்பியன் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி உள்வாங்காப்படவில்லை
8 ஆவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டிக்கு 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. துரதிர்ஷ்டவசமாக முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத்தீவுகள் தகுதி பெறவில்லை.
இந்த நிலையில் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதன்படி ‘ஏ’ பிரிவில் உலக சம்பியன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
மொத்தம் 15 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 18 ஆம் திகதி இடம்பெறும். அப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் (Reserve Day) அந்த போட்டி மீள நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.