இனப்பிரச்சினை தீர்விற்கு செனட் சபையினை மக்கள் கருத்தறியும் குழு பரிந்துரைக்கின்றது

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட 75 பேர் அடங்கிய செனட் சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று புதிய அரசியலமைப்பு குறித்து மக்களின் கருத்தறியும் குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

அதேபோன்று தமிழ்ச் சமூகத்தினருக்காக ஒருவர் உப ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு குறித்து மக்களின் கருத்தறியும் குழு தனது அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக நேற்றைய தினம் கையளித்திருந்தது.

குறித்த இந்த அறிக்கையிலேயே இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு மாகாணங்களுக்கு சிறிதளவிலான பொலிஸ் அதிகாரிகளை வழங்க வேண்டும் என்றும், ஆனால் எந்தவொரு மாகாணமும் இன்னொரு மாகாணத்துடன் இணைக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநர்கள், முதலமைச்சரின் சம்மதத்துடனேயே நியமிக்கப்படல் வேண்டும் என்ற பரிந்துரையையும் அக்குழு அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

மேலும் மொழி, இனம், மதம் அல்லது இனத்துவ அடிப்படையில் எந்த அதிகார அலகும் உருவாக்கப்படக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒற்றை ஆட்சி முறையில் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் இருத்தல் வேண்டும். மத்திய அரசாங்கம் அதிகாரங்களை மாகாணங்களுக்கு கையளிக்கலாம்.

ஆனால் மாகாணங்களின் சம்மதமில்லாமல் அதிகாரங்களை மீளப்பெறுவதற்கான உரிமை மத்திய அரசாங்கத்திற்கு இருத்தல் வேண்டும் என்றும் அந்தக் குழு மேலும் பரிந்துரை செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *