“உன்னால் முடியும்” என்ற வார்த்தையை மட்டும் அவர்கள் மனதில் பதிய வையுங்கள்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்காய் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் என் அன்புத் தம்பி மீது எனக்கிருக்கும் பிரியம் அலாதியானது. என் தம்பியின் கடின முயற்சிக்குத் தகுந்த பலனாய் அவன் பெறுபேறுகள் வாய்க்க வேண்டும் என்பது தான் அதீத அவா.

மிகுந்த ஈடுபாட்டுடன் தன் கற்றல் செயற்பாடுகளை செயற்படுத்திக் கொண்டிருக்கும் தம்பியோடே இந்நாட்களில் அதிகம் இருந்து வருகின்றேன். பரீட்சை குறித்து எந்தவிதமான எதிர்மறை சிந்தனைகளும் அவன் மனதில் தோன்றிவிடக் கூடாதென்பதில் அதிக கரிசனைக் கொண்டவள் நான். ஆக “உன்னால் முடியும்” என்ற ஊக்கப்படுத்தும் வார்த்தை கொண்டு அவனைத் தினம் தினம் திடப்படுத்திக் கொண்டிருப்பேன்.

தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை அவனிடம் இருந்தாலும் சில சமயங்களில் சோர்ந்து போகக் காண்பேன். அந்நேரங்களில் அவன் சிந்தனையை வேறு திசையில் மாற்ற வேண்டுமென்றே சிரித்துச் சிரித்துக் கதை வளர்ப்பதென் வழமை. அப்பொழுது தம்பியும் தன் நிலை மறந்து மனம்விட்டு என்னுடன் கதைப்பான். அவன் கதைகளுக்கு ஏற்ற போல் பதில் வழங்கி சோர்வுத் தன்மையைப் போக்கி உற்சாகப் படுத்தி விடுவேன்.

களைப்பின் உச்சத்தால் தம்பியிடமிருந்து வரும் ஏச்சுக்களும் அதிகம் எனக்குத் தான். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அவன் வேலைகளை உடனுக்குடன் செய்து கொடுக்கத் தவறுவதில்லை.

சில நேரங்களில் சில பாடங்களை அவன் மனதில் பதித்து வைத்துக் கொள்ள; தான் ஆசிரியராகி என்னை மணவராய் கூட்டி வந்து இருப்பாட்டி வைத்து படித்துத் தருவான்.. நானும் தலையாட்டிக் கொண்டே அனைத்தையும் கேட்டுக் கொண்டிருப்பேன். குறித்த விடயம் அவன் மனதில் பதியும் வரை அவ்விடம் விட்டு அகன்று போவதில்லை.

பரீட்சைக்கு இன்னும் இத்தனை நாட்கள் என்று பயங்காட்டியோ,
போய்ப் படி என்று உத்தரவு போட்டோ,
“09A” சித்தியே வேண்டும் என்றோ,
இதர செயற்பாடுகள் விட்டுத் தூரமாக்கியோ,
வீட்டுக்குள்ளே பூட்டி வைத்தோ, எதுவும் கிடையாது.

அவனுக்கு விரும்பும் நேரத்தில் படிக்கவும் மற்ற நேரங்களில் இதர வேலைகளில் ஈடுபடவும் அவனால் முடியும். என்றும் வரையறைக்குள் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள அவனுக்கு எங்களால் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லவே இல்லை.

உண்மையில் வரும் பரீட்சையில் என் தம்பி “09A” சித்திகள் தான் பெற வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. அவன் முயற்சிக்குத் தகுந்த பலன் கிட்டினால் போதும். அவன் எதிர்ப்பார்ப்புகளுக்கு வெற்றி கிடைத்தால் போதும். அதன் மூலம் இறைநம்பிக்கை அவனில் இன்னுமின்னும் பலப்பட்டால் போதும். அவனின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு இப் பரீட்சைப் பெறுபேறுகள் சாதகமாய் அமைந்தால் அதுவே போதும்..
என் அன்புத் தம்பிக்கு இறையுதவு என்றும் இருக்கும் என்பதில் அவனை விட எனக்கு அதிகம் நம்பிக்கை உண்டு..

“முயற்சியாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்” என்று அடிக்கடி உச்சரிக்கும் அவன் நாவுகள் அவ் வார்த்தையின் சுவையை நிச்சயம் புரிந்து கொள்ளும். இன்ஷா அல்லாஹ்..

இதேநிலையில் வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காய் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் பாசமிகு தம்பி தங்கைகள் உங்கள் வீடுகளிலும் இருக்கலாம். இந்நாட்களில் அவர்களை முடியுமானவரை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். “உன்னால் முடியும்” என்ற வார்த்தையை மட்டும் அவர்கள் மனதில் பதிய வையுங்கள். இன்னுமின்னும் அழுத்தங்கள் கொடுத்து அவர்களை உளைச்சலுக்கு ஆட்படுத்தாமல் அமைதியாய் வைத்துக் கொள்ளுங்கள்.

என் தம்பிக்கும் கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சைக்காய்த் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து தம்பி தங்கைகளுக்கும் இறைவன் அருள்பாளிக்கட்டுமாக..!

Aathifa Ashraf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image