அன்று மாடு மேய்க்கும் சிறுமி…இன்று கல்வி அமைச்சர்

சரியான வழிகாட்டுதலும் கல்வியும் இருந்தால் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ள பெண்ணும் உயர்ந்த நிலை அடையலாம் என நஜாத் என்ற பெண் நிரூபித்திருக்கிறார்.

நஜாத் பெல்கசம் இப்போது பிரான்ஸின் கல்வி அமைச்சராக இருக்கிறார். அவருடைய ஆரம்பகால வாழ்க்கையோ மொராக்கோவில் ஆடு மேய்க்கும் சிறுமியாக வேலை பார்த்ததுதான்.

இவருடைய வாழ்க்கை, கால்நடை மேய்க்கும் அனைத்து ஏழைக் குழந்தைகளுக்கும், அதுபோல, தாழ்வுநிலையில் உள்ளவருக்கும், உலகின் உயர்ந்த பதவி, பெருமைகளை அடைய முயன்றால் முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

முதல் பெண் கல்வி அமைச்சர்

ஆகஸ்டு 25, 2014 ல் பிரான்ஸின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவுக்கு கல்விதுறை அமைச்சரானார்.

பிரான்ஸின் முதல் பெண் கல்வி அமைச்சர் என்பது பெண் சமுதாயத்துக்கும் பெருமையான விடயம்.

கால்நடை மேய்த்தார்

நஜாத் அக்டோபர் 4, 1977 ல் மொராக்கோவின் கிராமப் புறத்தில் பிறந்தார். அங்கு அவருடைய குடும்ப தொழிலில் உதவியாக ஆடுகளை மேய்க்கும் வேலையும் இளம் வயதில் செய்துள்ளார்.

அப்போது, அவர் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கவும் மாட்டார்.

ஆனாலும், புத்திசாதுர்யம், கல்வி கற்கும் ஆர்வம், சமூக நீதி பற்றிய அக்கறை, அவருக்கு இயல்பாகவே இளம் வயதிலிருந்தே ஏற்பட்டிருந்தது.

பிரான்ஸுக்கு குடிபெயர்ந்தார்

பொருளாதார தேவைக்காக அவருடைய தந்தை பிரான்ஸில் உள்ள அமீன்ஸ் சூப்பர்ப்ஸ் நிறுவனத்தில், கட்டட தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்திருந்தார். பிறகு, தன் மகள் நஜாத் உட்பட குடும்பத்தினரை பிரான்ஸுக்கு 1982 ல் அழைத்துக்கொண்டார்.

அரசியல் படித்தார்

அதனால், நஜாத்துக்கு பிரான்ஸில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பாரிஸில் உள்ள அரசியல் படிப்பு பிரிவுகள் கல்வி நிறுவனத்தில் அரசியல் படித்து, 2002 ல் பட்டம் பெற்றார்.

கட்சிப் பணி

பட்டம் பெற்ற அதே ஆண்டில், பிரான்ஸின் சோசலிச கட்சியிலும் உறுப்பினராக சேர்ந்தார்.

அந்த கட்சியின் சார்பாக, உள்ளூர் வாசிகளிடம் ஜனநாயகத்தை வலியுறுத்துவது, அரசு காட்டும் பாரபட்சங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது. குடிமக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பது, வேலைவாய்ப்பு மற்றும் வீடு தேவைகளை பூர்த்திசெய்து கொடுக்க அணுகுவது, போன்ற சிறப்பான கட்சிப்பணிகளால் மக்களிடம் கட்சியை வலுப்படுத்தினார்.

தேடிவந்த பதவிகள்

2007, பிப்ரவரியில், செகோலின் ராயல் பிரச்சார குழுவில் பெண் பேச்சாளராக சேர்ந்தார்.

மே 16, 2012 ல் பிரான்ஸ் ஜனாதிபதியின் பிராங்கோயிஸ் ஹோலண்டே அமைச்சரவையில் பெண்ணுரிமை அமைச்சராகவும் அரசின் சபாநாயகராகவும் பதவி ஏற்றார்.

ஒளிதெறிக்கும் உயர்வு

ஆரம்ப காலத்தில் மேய்ப்பு சிறுமியாக இருந்தாலும் இன்றைய அவருடைய திறமைகள், அமைச்சர் பதவிக்கு நிச்சயமாக குறைந்ததில்லை, ஆனால், தாழ்வான ஆரம்ப வாழ்க்கையை எண்ணி அருவருக்கும் தடை மனோபாவம் இல்லாமல், சர்வதேச சமூகம் மாறியிருப்பது வரவேற்பானது.

இன்னும் சொல்லப்போனால், அடித்தட்டு மக்களின் மனநிலையும் தேவையும் நன்கு புரிந்துகொள்ள நஜாத் போன்றவர்களுக்கு பதவி முன்னுரிமையே அளிக்கலாம். அவர்களும் தாங்கள் சாதித்த திருப்தியோடு நில்லாமல், தன்னைப் போன்றவருக்கும் முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருந்தால் சகல கோணத்திலும் முற்போக்கானதே!.

படிப்பில் ஈடுபாடுகொள்ளாதவனை ’மாடு மேய்க்கப் போ’ என்பார்கள். ஆனால், மாடு மேய்ப்பவர்களும் படிப்பில் ஆர்வம் கொண்டால் உலகம் வியக்க உயரலாம் என்பது நஜாத் வாழ்க்கையில் நிஜமாகிருக்கிறது. நஜாத் ஒரு ஒளிதெறிக்கும் உயர்வு!

உலக நீரோடையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விட, சமூக பேதமற்று பார்க்கும் மனநிலை வளர்வதுதான் சரியான முன்னேற்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image