கேகாலையில் மண்சரிவால் இடம்பெயர்ந்தவர்களுக்கு காணிகள் வழங்க நடவடிக்கை

கேகாலை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தங்களால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 1000 குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்பொருட்டு, 400 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சுமனதிஸ்ஸ தாம்புகல குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலணி மற்றும் கேகாலை மாவட்ட செயலாளர் ஆகிய தரப்புகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

ஒதுக்கப்பட்டுள்ள காணியை சீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரமளவில் காணியை துண்டுகளாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் 1439 குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக மாவட்ட செயலாளர் அபேவிக்ரம குறிப்பிட்டார்.

இதுதவிர, கேகாலை மாவட்டத்தில் 938 இடங்களில் மண்சரிவு அபாயம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், 215 இடங்களில் ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார்.

கேகாலை மாவட்டத்தில் மண்சரிவினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கும், வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்குமான திட்டத்திற்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அனர்த்தங்களுக்குள்ளான கேகாலை மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றபோதே இதற்கான அங்கீகாரத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இதன் பிரகாரம், தேவையான காணிகளை சுவீகரிப்பதுடன், வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image