கிராம உத்தியோகத்தரை தாக்கிய இராணுவ சிப்பாய்கள் மூவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூலாக்காடு பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மரக்கடத்தல் மற்றும் மிருக வேட்டை இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய கிராம உத்தியோகத்தர், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு 9 மணியளவில் குறித்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது மரக்குற்றிகளை ஏற்றிய வண்டியில் பயணித்த இராணுவத்தினர் சிலரைக் கைது செய்ய முற்பட்ட
வேளையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரக்கடத்தலில் ஈடுபட்ட சந்தேநபர்களைக் கைது செய்ய முற்பட்ட வேளை குறித்த பகுதி கிராம உத்தியோகத்தர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தரை தாக்கிய இராணுவ சிப்பாய்கள் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலுக்குள்ளான கிராம உத்தியோகத்தர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *